குண்டு பட்டும் முழங்கிய தியோடர் ரூஸ்வெல்ட்




26வது அமெரிக்க அதிபராக இருந்தவர் தியோடர் ரூஸ்வெல்ட். எழுத்தாளர், போர்வீரர், இயற்கை நேசர் என்று இவருக்குப் பல்வேறு முகங்கள் உண்டு. 1901 லிருந்து 1909 வரை, அமெரிக்க அதிபராகப் பொறுப்பு வகித்தார். இந்நிலையில், அக்டோபர் 14, 1912ல் தியோடர் ரூஸ்வெல்ட் சுடப்பட்டார். அவர் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தபோது, அவர் மக்களிடையே ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். ரூஸ்வெல்ட்டின் நெஞ்சிலிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டு பதறிய பாதுகாவலர்கள், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அதை ரூஸ்வெல்ட் மறுத்துவிட்டார். உரை நிகழ்த்தி முடிக்கும்வரை தன்னால் மருத்துவமனைக்கு வரமுடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

‘நண்பர்களே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் சுடப்பட்டுள்ளேன் என்பது உங்களில் எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியாது’ என்றுதான் தன் பேச்சை அவர் தொடங்கினார். பிறகு தனது சட்டை உள் பாக்கெட்டிலிருந்து உரை குறிப்புக் காகிதம் ஒன்றை எடுத்து, அவருக்கு முன்னால் அமர்ந்து உரையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களிடம் காட்டினார். ரத்தம் தோய்ந்திருந்த அந்தக் காகிதத்தில், ஓர் ஓட்டையும் இருந்தது.

நல்லவேளையாக, அவருடைய மூக்குக் கண்ணாடிக்கான ஸ்டீல் பெட்டி ஊடாக குண்டு பாய்ந்ததால், உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. சுட்டவன், சலூன் கடை வைத்திருந்த ஜான் ஃபளம்மாங் என்பவன் ஆவான். குண்டடி பட்டும் ரூஸ்வெல்ட் இவ்வளவு தைரியமாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தது உண்மையிலேயே வியப்புதான். அதற்கு ஒரு சுவாரசியமான காரணம் உண்டு. சுடப்பட்டதும், அவருக்கு இருமல் வந்தது. ஆனால், அவர் வாயிலிருந்து ரத்தம் வரவில்லை. குண்டு நுரையீரலில் காயம் ஏற்படுத்தியிருந்தால்தான், இருமும்போது ரத்தம் வரும். வரவில்லை என்பதால், நுரையீரலில் காயம் இல்லை என்பதை ரூஸ்வெல்ட் அறிந்திருந்தார். இதற்குக் காரணம், அவருக்கு விலங்கு வேட்டையில் அதிக அனுபவம் உண்டு. 



அந்தக் குண்டின் மேல் என்ன பிரியமோ தெரியவில்லை, கடைசிவரை அவர் நெஞ்சாங் கூட்டிலேயே அது இருந்தது. மருத்துவர்களின் அறிவுரைதான் அதற்குக் காரணம். அந்தத் துப்பாக்கி ரவையை எடுப்பதைவிட, அதை அங்கேயே விட்டுவிடுவது தான் குறைவான ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனால், ரூஸ்வெல்ட் இறக்கும் வரை அந்தத் துப்பாக்கிக் குண்டை தன் நெஞ்சிலேயே சுமந்தார். சரி, அவர் எடுத்துக்காட்டிய உரைக்குறிப்பின் தலைப்பு என்ன தெரியுமா? ‘முன்னேற்றம் என்ற இலக்குக்காகப் பாடுபடுவது, எந்த தனிநபரை விடவும் உயர்ந்தது’ "Progressive Cause Greater Than Any Individual".

Comments

Popular posts from this blog

காகிதப் பணம் தோன்றிய வரலாறு

உருளை சிப்ஸ் தோன்றிய சுவாரஸ்ய வரலாறு

குமிழ் வடிகட்டி – இணையதள பயனர்களின் பகைவன்