குமிழ் வடிகட்டி – இணையதள பயனர்களின் பகைவன்

இன்டெர்நெட்டில் நம்மால் அதிகம் புழங்கப்படும் வலைத்தளம் எதுவென கேட்டால் இலகுவாக சொல்லிவிடலாம் கூகுள் என்று... காரணம் கூகுள் என்ற தேடல் இணையதளம் செய்த புரட்சி அத்தகையது. ஏதேனும் தேட, வாசிக்க, பொருள் வாங்க, சந்தேகம் தீர்க்க, பிள்ளைகளின் வீட்டு ஹோம்வொர்க்க செய்ய என்று ‘அ’ முதல் ‘ஃ’ வரை அத்தனையையும் ஒரு சொடக்கில் கொண்டு வந்து காட்டக்கூடியது கூகுள். ஆனால், கூகுளின் ‘குமிழ் வடிகட்டி’ தொழில்நுட்பத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளக்கூடும்.

கிணற்றுத் தவளைக்கு ஒப்பானதுதான் குமிழ் வடிகட்டி தொழில்நுட்பம். கிணற்றுக்குள் இருந்து கொண்டு கத்துகின்ற தவளைக்கு அதன் குரல் தவிர்த்து வேறு கேட்பதில்லை. மீண்டும் மீண்டும் எதிரொலி ஏற்பட்டு அவற்றினுடைய ஓசை மட்டுமே காதில் விழுந்துகொண்டிருக்கும். இந்த தவளைக்கு ஒப்பாகத்தான் கூகுள் பயனர்கள் ஆக்கிவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார் இன்டெர்நெட் செயற்பாட்டாளர் எலி பிரைசர். 2011 ஆம் ஆண்டு தனது புத்தகமான Filter Bubble: What the internet is hiding from You என்ற புத்தகம் மூலம் ‘குமிழ் வடிகட்டி’ (Filter Bubble) என்ற கோட்பாட்டை அவர் முன்வைத்தார். எலி பிரைசருக்கு நேர்ந்த ஒரு விசித்திரமான அனுபவமே இந்த கோட்பாட்டை உருவாக்க உதவியது.

கூகுளில் தேடுபொறியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் குறித்து அறிவதற்காக BP என்ற வார்த்தையை தட்டச்சு செய்து தேடினார். அதில் அவருக்கு கிடைத்த தேடல் முடிவுகள் ஒருவிதமாக இருக்க, அவர் நண்பருக்கு கிடைத்த தேடல் முடிவுகளோ வேறொரு மாதிரியாக இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த எலி பிரைசர், இதுகுறித்து தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டார். கூகுளில் இட்ட வார்த்தை ஒன்றுதான். காட்டும் முடிவுகளோ ஆளுக்கு தகுந்தாற்போல் மாறுபடுகிறதே என்று அவர் குழப்பமடைந்தார். இதுகுறித்த தீவிர ஆராய்ச்சியில் இறங்கிய அவர், அல்காரிதம் என்ற உயர்கணித படிமுறையின் கைவண்ணமே தனக்கு நேர்ந்த அனுபவத்திற்கு காரணம் என்பதை கண்டுபிடித்தார். அந்த அல்காரிதம் என்ன செய்யும்? நாம் கடந்த காலத்தில் என்னென்ன செய்திருக்கிறோம், எந்தெந்த தளங்களை சென்று பார்த்திருக்கிறோம், எதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம், நம்முடைய வசிப்பிடம் என்ன என்று நம்முடைய ரிஷி மூலத்தை எல்லாம் திரட்டி வைத்துக்கொள்ளும். அந்த தரவுகளை வைத்து நம்முடைய ரசனை, கொள்கை, சிந்தனை என்பன போன்ற சிக்கல் நிறைந்த கணக்குகளை எளிதாக செய்து கணித்து விடும். இப்படியாக, நாம் எந்த விஷயத்தை கூகுளில் போட்டு தேடினாலும், இந்த அல்காரிதம் நமது ரசனைக்கு ஏற்றவாறுதான் முடிவுகளைக் காட்டும். நமக்கு பிடித்த தகவல்களை மட்டும்தான் கொடுக்கும்.

இதில் என்ன ஆபத்து உள்ளது என்று நாம் கேட்டால், மிகப்பெரிய பிரச்சினையாக இது மாறக்கூடும் என்கின்றனர் இணையதள ஆராய்ச்சியாளர்கள். நீங்கள் தீவிர தி.மு.க. சார்பு உள்ளவர் என்று உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம். இப்பொழுது இணையத்தில் நீங்கள் ஏதேனும் அரசியல் சம்பந்தமாக கட்டுரையைத் தேடினால் உங்களுக்கு அ.தி.மு.க. வினரின் ஆதரவு கருத்து குறித்த எந்த செய்தியையும் உங்களுக்கு கூகுள் காட்டாது. அல்லது அ.தி.மு.க.வினரின் பார்வை புறந்தள்ளப்பட்டு கடைநிலை முடிவாக காட்டப்படக்கூடும். நாளடைவில் இணையத்தில் உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை மட்டும்தான் நீங்கள் படிப்பீர்கள், பார்ப்பீர்கள், பேசுவீர்கள். உங்களுக்கு விருப்பத்துக்கு முரண்பட்ட கருத்துகள், உங்கள் கொள்கைக்கு மாறுபாடான விஷயங்கள் உள்ள எந்த இணைய தள பக்கமும் உங்களுக்கு காட்டப்படமாட்டா. உங்கள் தேடல் முடிவுகளிலிருந்து ஒதுக்கிவைக்கப்படும்.

முரண்பட்ட கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயக மாண்புக்கு இது முற்றிலும் எதிராக அமைந்துவிடக்கூடும். அணு உலை எதிர்ப்பு, அணு உலை ஆதரவு, வலதுசாரி, இடதுசாரி என்று கட்சிகளாக, குழுவினராக நம்மை வகைப்படுத்தி பிரித்துவிடக்கூடிய அபாயம் இந்த தொழில்நுட்பத்தில் இருக்கிறது.

எதிர்தரப்பினரின் கருத்தை புறந்தள்ளும் நாம், நம்முடைய குறுகிய எண்ணம்தான் மற்றவர்களின் எண்ணம் என்ற பிம்பத்தை நமக்குள் ஏற்படுத்திக்கொள்ள அபாயம் நிறையவே இருக்கிறது. இதைத்தான் குமிழி வடிகட்டி என்கிறார் எலிட் பிரைசர்.

கூகுளை பொறுத்தவரை நமது இடம், இதற்கு முன்னால் அதிகமாக பார்க்கப்பட்ட இணையதளம் என்று 57 வகையில் நம்மை அலசிப்பார்த்து முடிவுகளை காட்டுகிறது. கூகுளில் மட்டும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆறாம் விரலாய் இருக்கக்கூடிய பேஸ்புக்கிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பேஸ்புக்கில் இந்த தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை எளிதாக புரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு நமக்கு பிடித்த நண்பர்களின் போட்டோக்களை தொடர்ந்து லைக் செய்கிறோம், சீரியசான பதிவுகளுக்கு நாம் லைக் செய்வதில்லை என்று வைத்துக்கொள்வோம். நாளடைவில் வெறும் பொழுதுபோக்கு அளவிலான செய்திகள் மட்டுமே உங்கள் கண்களில் தென்பட ஆரம்பித்து விடும். சீரியசான பதிவுகள் யாவும் உங்கள் செய்தி ஓடையில் (News Feed) படிப்படியாக குறைந்து, நீங்கள் இதற்கு முன்னால் லைக் செய்த விஷயங்கள் மாதிரியான குணநல பண்புகள் கொண்ட செய்திகளே ஆக்கிரமித்து விடும். இதனால், எதிர்காலத்தில் உங்களுக்கு தேவைப்படும் முக்கிய செய்திகள், நாட்டு நடப்புகள், பிரச்சினைகள் ஆகியவற்றை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படும்.

குழந்தைக்கு பிடித்தமான இனிப்பு பண்டங்களை அதிகளவில் கொடுத்து, அதற்கு கீரை போன்ற சத்துள்ள ஆகாரங்களை தவிர்ப்பது போல்தான் இதுவும். நமக்கு பிடித்தமான ஒரு உலகை படைத்து பேஸ்புக், கூகுள் போன்ற இணையதளங்கள் ஏற்படுத்தி கொடுக்கும்போது, அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம். நம் ஆரோக்கிய சிந்தனைக்கு என்ன தேவையென்பதை கற்றுக்கொள்வதற்கு அதில் ஏதும் இடம் இருக்கப்போவதில்லை. கலவையான அம்சங்கள் இல்லாமல் போகும். வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நமது இந்தியப் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு குமிழி வடிகட்டி ஆபத்தான ஒன்றுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

இதை தடுக்க என்ன வழி?


கஷ்டம் தான். தொழில்நுட்பம் அந்தளவுக்கு சிக்கலனாதாக இருக்கிறது. நீங்கள் கூகுள் அக்கவுன்ட்டில் லாக்கிங் செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் உங்கள் தகவல்களை திரட்டக்கூடிய அளவில் இந்த தொழில்நுட்பம் அதிநவீனமானது என்பதால் இதை தடுப்பதற்குரிய வழி என்னவென்று தெரியாமல் இணைய செயற்பாட்டாளர்கள் திணறி வருகின்றனர். இதற்கு எதிராக வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. குக்கீஸ்களை மற்றும் நமது இணைய வரலாற்றை அழிப்பது போன்ற சில வழிகள் சொல்லப்பட்டாலும், அந்தளவு அவை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. தொழில்நுட்பத்தில் ஆபத்து இருக்கிறதே என்பதற்காக புறாவிடு தூது காலத்திற்கே நம்மால் திரும்பிச் செல்ல முடியாது. 

எனவே, இதை எதிர்த்து போராடுவதுதான் சிறந்த வழி என்று கூறும் இன்டெர்நெட் ஆர்வலர்கள், இதுபோன்று மனிதர்களை அடிமைப்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு எதிராக போராடியும் வருகின்றனர். நம்முடைய ரசனை, அரசியல் சார்பு, விருப்பு வெறுப்புகள் குறித்த தகவல்களை திரட்டி வணிக நிறுவனங்களுக்கு விற்று லாபம் சம்பாதித்து தரும் பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடப்போவதில்லை. நம் கண் முன்னால் இருக்கும் ஒருசில வழிகள் என்னவென்றால், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத மாற்று இணைய தளங்களை பயன்படுத்துவதும், குமிழி வடிகட்டி நம்மை எந்த விதத்தில் எல்லாம் பாதிக்கும் என்பதை உணர்ந்து விழப்புணர்வோடு இருப்பம்துதான்.

Comments

Popular posts from this blog

காகிதப் பணம் தோன்றிய வரலாறு

உருளை சிப்ஸ் தோன்றிய சுவாரஸ்ய வரலாறு