பழக்கம் – செயல்களை வசப்படுத்தும் ஓர் அரிய கலை

நம்மில் பலருக்கும் நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கக் கூடும். தினமும் அதிகாலை எழ வேண்டும்; உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும் ; வேலைகளை அன்றன்றே முடிக்க வேண்டும்; எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும் என இப்படியாக பல நல்ல பழக்கங்களை உண்டாக்கிக்கொள்ள நமக்கு ஆசைதான். ஆனால், அவை வெறும் ஆசைகளாகவே இருந்து வருகின்றன. அதை செயல்படுத்துவது எப்படி என்கிற கலை நமக்கு வசப்பட மறுக்கிறது. இப்படி நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டிருந்து, ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் நீங்கள் தடுமாறிக்கொண்டிருந்தால் உங்களுக்கானதுதான் இந்தக் கட்டுரை...

முதலில் பழக்கம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு செயலை தொடர்ச்சியாக அதே சமயம் இலகுவாக செய்வதற்கேற்ப நம் மனதையும், அறிவையும் வசப்படுத்துவதற்கு பெயர்தான் பழக்கம் என்று குறிப்பிடுகிறோம். என்றோ ஒருநாள் இரயிலுக்கோ, விமானத்திற்கோ செல்ல வேண்டும் என்பதற்காக நாம் அதிகாலையில் எழுந்திருக்கலாம். இன்டர்வியூ செல்வதற்காக குளித்துவிட்டு நல்ல சுத்தபத்தமான ஆடைகளை அணிந்து செல்லலாம். ஆனால், அதுவல்ல பழக்கம் என்பது!. தினமும் அதிகாலை எழுவது, அன்றாடம் குளிப்பது, சுத்தமாக ஆடை அணிவது என்பதையே பழக்கம் என்று கூறுகிறோம். ஒரு காரியத்தை தொடர்ச்சியாக செய்யும்போது, நம் மனப்பதிவில் அவை பழக்கங்களாக உருமாற்றம் அடைகின்றன. குறிப்பிட்ட செயல்களுக்கு நம்மை பழக்கப்படுத்திக் கொண்டால் அதன்பிறகு அந்த செயல்களை செய்து முடிக்க பிரத்யேக கவனம் எடுக்கவோ, சிரமமோ படத் தேவையில்லை. நம்மை அறியாமலேயே அது அனிச்சையாக நடக்க ஆரம்பித்துவிடும். நாம் சில சமயங்களில் கவனித்திருக்கக்கூடும். நம் வீட்டிலிருந்து புதிதாக ஒரு இடத்திற்கு செல்வதற்காக நாம் கிளம்பி செல்வோம். ஆனால், நாம் நம்முடைய வழக்கமான, பழக்கப்பட்ட பாதையிலேயே நம்மை அறியாமல் சென்றுவிடுவோம். கொஞ்ச தூரம் சென்ற பிறகுதான், அடடே நாம் செல்ல வேண்டிய பாதை வேறு என்பதை உணர்ந்து சுதாகரிப்போம். இதற்கு காரணம் நம்முடைய பழக்கப்பட்ட மனம்தான். அதேபோல் நமக்கு அசாத்தியமாக தோன்றக்கூடிய காரியங்களை எல்லாம் சர்வசாதாரணமாக சிலர் செய்து முடிப்பார்கள். எப்படி இவ்வளவு நன்றாக கார் ஒட்டுகிறீர்கள், குதிரையேற்றம் செய்கிறீர்கள், நீச்சல் அடிக்கிறீர்கள், ஸ்கேட்டிங் செய்கிறீர்கள், விரதம் இருக்கிறீர்கள், நன்றாக எழுதுகிறீர்கள் என்று நம் நண்பர்களிடம் கேட்டிருப்போம். அதற்கு பின்னால் உள்ள ரகசியம் அவர்கள் வசப்படுத்திய ‘பழக்கம்’ தான். சித்திரம் கைப்பழக்கம் என்பார்களே... அது இதுதான். பழக்கம் ஒரு செயலை கூர்மையாக்கி, நமக்கு கைவந்த கலையாக மாற்றுகிறது.

நல்ல பழக்கம் Vs தீய பழக்கம்

கீழ்நிலை ஆசைகளை அடக்கி சுயகட்டுப்பாட்டை வளர்க்கும் செயல்களை நல்ல செயல்கள் என்றும், அதை தொடர்ச்சியாக செய்து வரும்போது நல்ல பழக்கம் என்றும் அடையாளமிடுகிறோம். அதே சமயம் அளவுக்கதிமான உறக்கம், உணவு, சோம்பல் உள்ளிட்டவைகளை தீய செயல்கள் என்கிறோம். மனிதர்களைப் பொறுத்தவரை அவர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கே இலகுவாக ஆட்படுபவர்களாக இருக்கிறார்கள். கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை இல்லையென்றால் மனிதர்கள் இயற்கையாகவே அதை நோக்கி நகர்கிறார்கள். சுயக்கட்டுப்பாடு உள்ளிட்ட நற்பண்புகளை வலியுறுத்தும் பழக்கங்களே சிறந்தது என்று நம் அறிவு சொன்னாலும் தீய பழக்கங்களையே நம் மனம் நாடிச் செல்வது இதனால்தான். இத்தகைய தீயபழக்கங்களின் விளைவாக மனிதன் சோம்பல், கவலை, துக்கம், பயம் உள்ளிட்ட கஷ்டங்களுக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது. மறுபுறம், அறிவுக்கிணங்க மனதை கட்டுப்படுத்துவது ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தாலும் இறுதியில் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால் இதைப் பழக்கத்தால் தான் சாதிக்க முடியும்.

ஆனால் அது அவ்வளவு விரைவாக வசப்படுகிற காரியம் அல்ல. காரணம் நாம் ஏற்கனவே பழக்கப்பட்டிருக்கிற ஒரு விஷயத்திலிருந்து புதிய பழக்கத்திற்கு நம்மை இட்டுச்செல்வதற்கு நீடிய பொறுமையும், பயிற்சியும் தேவை. அதிலும் தீய பழக்கங்களின் சிற்றின்ப சுகத்திற்கு ஆட்பட்டோராய் இருந்தோமென்றால், இன்னும் அதிகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியான நற்செயல்களே ஒரு நல்ல பழக்கமாக மாறுகிறது. ஆதலால் ஏதேனும் ஒருநாள் முயற்சி செய்துவிட்டு எனக்கு பலன் கிடைக்கவில்லை என்று யாரும் கூறினால் அதற்கு நம்முடைய பதில் ‘பழக்கம் என்பது பாஸ்புட் அல்ல... உடனடி ருசி கிடைப்பதற்கு... உங்களுக்குத் தேவை, பொறுமை மற்றும் விடாமுயற்சி!’.

பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள

1. சுயபரிசோதனை


ஏற்கனவே குறிப்பிட்டது போல் நமக்கு நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் ஏதோ ஒன்று தடுக்கும்! அது என்ன என்பதைக் கண்டுபிடிப்பதுதான் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கான முதல் மற்றும் முக்கிய படிநிலை. உதாரணத்திற்கு எல்லோருக்கும் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதை நோக்கத்தை அடைய சரியான வழி உடற்பயிற்சி செய்வது என்பதையும் நாம் அறிந்து வைத்திருப்போம். ஆனால், அதை ஏன் நம்மால் செயல்படுத்த முடிவதில்லை என்று காரணம் கேட்டால் தெரியாது. இந்த இடத்தில் தான் நம் மனதை ஆழ ஊடுருவ வேண்டும். என் நண்பர் ஒருவர் அவர் ஏன் உடற்பயிற்சி செய்வதில்லை என்ற காரணத்தை சொல்லும்போது, விடியற்காலையில் எழுந்திருக்க முடியவில்லை, உடற்பயிற்சி கூடத்தில் எல்லாம் புதியவர்களாய் இருப்பதால் செல்வதற்கு தயக்கமாக இருக்கிறது, உடற்பயிற்சி கூடம் வீட்டிலிருந்து தூரமாக இருக்கிறது, துணைக்கு ஆள் இல்லை, ஷு இல்லை, பீஸ் கட்ட பணம் இல்லை என்று ஏகப்பட்ட காரணங்களை கூறினார். ஆனால் இந்த காரணங்களை உடனடியாக அவரால் பட்டியலிட முடியவில்லை. ஆனால் துருவித்துருவி கேள்வி கேட்கும்போது அவரால் சொல்ல முடிந்தது.

நமக்குள்ளும் இப்படி அனேக காரணங்கள் ஒளிந்திருக்கும். அவை நம் புதிய செயல்களை செய்ய விடாமல் தடுத்துக்கொண்டிருக்கும். முதலில் அவற்றை நமக்கு நாமே விசாரணை செய்து பட்டியலிட வேண்டும்.

2. சரியான காரணங்களா?


அடுத்ததாக பட்டியல் இட்டவுடன், அவை சரியான காரணங்கள்தானா என்பதை ஆராய வேண்டும். பெரும்பாலும் அவை வெறும் போலி சாக்குபோக்குகளாகத்தான் இருக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு உடற்பயிற்சி கூடத்திற்குதான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்யலாம்; அல்லது அருகிலுள்ள பூங்காவிற்கோ, தெருக்களுக்கோ சென்று நடைபயிற்சி செய்யலாம். அதேபோல் ஷு என்பது துணைசாதனமே தவிர, செருப்பு போட்டுக்கொண்டோ, வெறும் காலிலோ உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பதெல்லாம் கிடையாது. இன்னும் எதார்த்தத்தை சொல்வதென்றால், மனதைப் பொறுத்தவரை தனக்கு ஒரு செயலை செய்ய பிடிக்கவில்லையென்றால், அது கடின உழைப்பை கோருகிறது என்றால் அதை செய்யாமல் இருக்க ஆயிரங்களை அடுக்கும் சக்தி பெற்றது மனம். அவை சொல்லும் காரணங்களை அலசிப்பார்த்தால் அவற்றில் 90 சதவீதம் போலி சாக்குகள் என்பது தெரியவரும். அப்படிப்பட்ட போலி காரணங்களை ஒதுக்கிவிட்டு, நியாயமான காரணங்கள் எவை என்பதை அறிந்து அதை சரிபடுத்துவதற்கு உரிய வழிமுறைகளை ஆராய வேண்டும்.

3. பிரச்சினைகளை சிறுசிறு பகுதிகளாக உடையுங்கள்
நான் எதிலுமே ஒழுங்கற்றவனாக இருக்கிறேன், தொடர்ச்சியான வேலைகள் செய்வதில்லை, நேரத்திற்கு வேலை செய்வதில்லை என்று நம்மை நாமே குறைப்பட்டு கொள்வோம். இவையெல்லாம் நம்மைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பொதுவான மேலோட்டமான அபிப்ராயங்கள். அதாவது நமது நடத்தையில் மாற்றம் வேண்டும் என்று நமக்கு உணர்த்துவதற்காக நம் மனம் இந்த அபிப்ராயத்தை உருவாக்கித் தருகிறது. ஆனால் அந்த அபிப்ராயத்தில், மாற்றுப் பரிகாரம் என்ன, செயல்படுவதற்குரிய வழிமுறைகள் என்ன என்பன போன்றவை விளக்கமாக இருக்காது. இதற்கு நம் அபிப்ராயத்தை மேலும் விவரமாக ஆராய்ச்சி வேண்டும். உதாரணத்திற்கு எதில் நாம் ஒழுங்கில்லை? என்று கேள்வி கேட்டு நம் செயல்பாடுகளை சிந்தித்து பார்க்க வேண்டும். இருசக்கர வாகனத்தை உரிய நேரத்திற்கு சர்வீஸ் விடுவதில்லை, எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது கிடையாது, தேவையான பொருட்களை பொருட்களை தேவைக்கேற்ப எடுக்கும்படி ஒழுங்குற அடுக்கி வைப்பதில்லை, வீட்டு அறை குப்பை மேடாக காட்சியளிக்கிறது, உரிய நேரத்திற்கு தொலைபேசி பில் கட்டுவதில்லை போன்ற ஒழுங்கின்மைகளை என்று குறிப்பாக பட்டியலிடுங்கள். அதாவது மேலோட்டமான பிரச்சினை என்பதை சிறிய சிறிய தெளிவான பகுதிகளாக உடைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அந்த சின்ன சின்ன பிரச்சினைகளை சரிசெய்ய திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள். அதோடு தற்போதைய ஒழுங்கின்மை செயல்களால் என்ன விளைவு ஏற்படுகிறது, புதிய திட்டத்தின்படி செயல்பட்டால் என்ன நன்மைகளை பெறலாம் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.

4. நேரத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி

நாம் செயல்திட்டங்களை வகுத்து, அதற்கென நேரம் வகுத்தாலும் பல சமயங்களில் அதன்படி செயல்பட முடியாமல் போகிறது. இதற்கு காரணம் நம் கண்களுக்கு தெரியாத பலவீனங்களே... இணையத்தில் அதிக நேரம் செலவிடுவது, நண்பர்களுடனான அரட்டையில் செலவிடுவது, தொலைக்காட்சியில், அலுவலக வேலையில் மூழ்கி விடுவது என்று பல சின்னஞ்சிறிய பழக்கங்கள் அட்டைப்பூச்சி போல் நமக்குத் தெரியாமல் நம் நேரத்தை உறிஞ்சுபவையாக உள்ளன. எனவே, எந்த வேலைக்கும் அதற்குரிய நேரத்தை வகுத்து, ஒரு வேலை மற்றொரு வேலையில் தலையிடாமல் இருக்கும்படி கண்கொத்தி பாம்பாக கவனித்து வர வேண்டும். ஒரு வேலை மற்றொரு வேலையை பாதிக்கவிடக்கூடாது. அதோடு வேலைகளுக்குள்ளேயே எந்த வேலையை விரைந்து முடிக்க வேண்டும், எந்த வேலையை நிதானமாக முடித்துக்கொள்ளலாம், எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு அதன்படி செயல்படுங்கள். வேலைக்கு டெட்லைன் மட்டும் போடாமல், வேலைகளுக்குள்ளேயே ஷெட்யூல் ( நேர பாகுபாடு) போட்டு வேலை செய்யுங்கள்

5. படியேற்றம் மற்றும் தொடர்ச்சி

இவற்றுக்கு அடுத்தபடியானவை செயல்நிலைக்குரிய கட்டம். பெரும்பாலானவர்கள், நல்லதொரு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து ஆரம்ப காலத்தில் வீரியமாக செயல்படுவார்கள். உதாரணத்திற்கு வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ளப் போகிறேன் பேர்வழி என்று நிறைய புத்தகங்களை வாங்கி வைத்துகொண்டு படிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல அவர்கள் தொய்வடைந்து, கடைசியில் தங்கள் முயற்சியிலிருந்து பின்வாங்கிவிடுவார்கள். இதேபோல் உடற்பயிற்சி செய்கிற ஆர்வ கோளாறில் மாங்குமாங்கென முதல் நாளே அதிக நேரம் உடற்பயிற்சி செய்வார்கள். அவர்கள் மூன்று நாள் தாக்குப்பிடித்தால் அது பெரிய விஷயம்தான். உடல்வலி கண்டு அந்த திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு விடுவார்கள். ஏன் இதுபோன்று நாம் எந்தவொன்றிலும் கொஞ்ச காலத்திலேயே சோர்ந்து பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறோம் என்பதற்கு இரண்டு காரணங்களை கூறலாம். முதலில் அதிரடியான செயலில் இறங்கக்கூடாது. வைத்தால் குடுமி, வழித்தால் மொட்டை என்று இந்த பண்பை சொல்வார்கள். மாறாக, எதிலும் 1,2,3.... என்று தான் போக வேண்டும். அதிரடியாக செயல்பட்டுவிட்டு, பிறகு ஒரேதடியாக அதை விட்டு விடுவது அறிவுடைமை ஆகாது. கொஞ்சம் செய்தாலும் அதை தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.

அடுத்தது, இவ்வாறாக தொடர்ச்சியாக செய்து வரும்போது திடீரென வேறொரு ஊருக்கோ, புதிய சூழ்நிலைக்கோ ஆட்படக்கூடிய நிலை ஏற்படலாம். அதனால் உங்கள் அன்றாட அலுவலல்களில் சிறிது மாற்றமேற்பட்டு உங்கள் செயல்திட்டம் தடைப்படலாம். இதற்காக நீங்கள் குற்றஉணர்ச்சி அடைந்து விடக்கூடாது. காரணம், குற்றஉணர்ச்சி மன பலவீனத்தை ஏற்படுத்தக்கூடியது. மனபலவீனமோ ஊக்கத்திற்கு எதிரி. ஆதலால், நம் செயல்திட்டம் அலட்சியத்தாலோ, எதிர்பாராத காரணங்களாலோ தடைப்பட்டால் அதற்காக அதிக குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், மீண்டும் செயல்திட்டத்தை தொடர, செயல்படுத்த நாம் மனநிலையை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்குரிய படிப்பினையை நம்முடைய கடந்த கால செயல்களிலிருந்தே நம்மால் பெற முடியும். உதாரணத்திற்கு நாம் குழந்தைகளாக இருந்து நடைபயிலும் போது எத்தனையோ முறை விழந்து எழ செய்தோம். ஒருவேளை நாம் விழுந்துவிட்டோம் என்று மனம் வருந்தி மீண்டும் எழாமல் இருந்திருந்தால் நாம் யாராக இருப்போம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஆதலால், ஒரு விஷயத்தை செய்து முடிப்பதற்கு முக்கிய காரணி ஊக்கம். நம் செயல் முடிவால் விளையும் நன்மைகளை நம் மனத்திற்குள் நினைவு கூர்ந்து எண்ணும்போது ஊக்கமும், விடாமுயற்சியும் தானாகவே தோன்றும். சுருக்கமாக சொன்னால் செயல்படும்போது சிறியதிலிருந்து தொடங்க வேண்டும், அதை விடாமல் செய்து வர வேண்டும்.

இவ்வாறாக நம் நிலை அறிந்து, அதற்கேற்ப செயல்திட்டங்களை வகுத்து, நேரத்தை ஒதுக்கி, ஒன்றிலிருந்து மற்றொன்று என்று செயல்பட்டு, தொடர்ச்சியாக அதை செயல்படுத்தி வந்தால் நாளடைவில் அது பழக்கமாக மாறும். பழக்கம் உங்கள் செயல்களை விரைவுபடுத்தி ஒழுங்குபடுத்தி, அழகுபடுத்தி தரும்.

Comments

Popular posts from this blog

காகிதப் பணம் தோன்றிய வரலாறு

உருளை சிப்ஸ் தோன்றிய சுவாரஸ்ய வரலாறு

குமிழ் வடிகட்டி – இணையதள பயனர்களின் பகைவன்