காகிதப் பணம் தோன்றிய வரலாறு



ஸ்வீடனில் தனியார் வங்கி வெளியிட்ட காகிதப் பணம், 1666


சமீபகாலமாக, இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் இருந்தும் வரும் வார்த்தைகளில் ஒன்று, ‘பணம்’. காகிதப் பணப்பரிவர்த்தனை, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்ற வார்த்தைகளை தினமும் சில முறையேனும் நாம் கேள்விப்படுகிறோம். இந்தச் சூழலில், பணம் என்றால் என்ன?, வர்த்தகத்தில் காகிதப் பணத்தின் பங்கு என்ன? அது எப்போது தோன்றியது? இக்கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள, முதலில் பணம் எப்படி தோன்றி வளர்ந்தது என்பதைப் புரிந்துகொள்வோம். 

மனிதர்கள் ஆரம்பகாலத்தில், நாம் தற்போது செய்வது போல், மளிகைக் கடைக்கு சென்று பணம் கொடுத்து பொருட்களை வாங்கிக்கொள்ளவில்லை. மாறாக, தங்களுக்குத் தேவையான பொருளை ஒருவர் மற்றொருவரிடம் கொடுத்து பரிமாறிக்கொண்டனர். உதாரணத்திற்கு கடலோரப் பகுதியில் வசிப்பவருக்கு உப்பும், மீனும் அதிகமாக கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். ஓரளவுக்கு மேல், அவரால் அதை பயன்படுத்த முடியாது.

அதேசமயம், அவருக்கு அரிசியும், காய்கறியும் தேவை என்றால், அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள விவசாயிடம் வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்குப் பதில், தன்னிடம் அதிகமாக உள்ள உப்பையோ, மீனையோ அந்த மீனவர், விவசாயிடம் கொடுப்பார். இப்படி ஒருவருக்கு ஒருவர் தேவையான பொருளை மற்றவரிடம் கொடுத்து பரிமாறிக்கொள்ளுதலுக்கு பெயர், ‘பண்டமாற்று’ ஆகும். இந்த முறைப்படி, 2 கிலோ உப்பு, 3 கிலோ தக்காளிக்கு சமம் என்று ஏதேனும் ஒரு மதிப்பை நிர்ணயித்துக்கொண்டு, மக்கள் பொருட்களை மாற்றிக்கொண்டார்கள். ஆனால், பண்டமாற்று முறையிலும் சில சிக்கல்கள் இருந்தன. 

நேரடியாக ஒருவருக்கொருவர் பொருட்களை மாற்றிக்கொள்ளும் முறையால், வர்த்தக சுழற்சியில் வேகம் ஏற்படவில்லை. குறிப்பாக, மக்கள்தொகை வளர்ந்து வந்த காலத்தில் இப்பிரச்னை தீவிரமடைந்தது. உதாரணத்திற்கு, நெல் விவசாயிக்கு ஆண்டுக்கு ஒருமுறைதான் விளைச்சல் கிடைக்கும். அதேசமயம் தக்காளி விளைவிக்கும் விவசாயிக்கு அடிக்கடி விளைச்சல் கிடைக்கும். இப்போது இவர்கள் இருவரும் தங்கள் பொருட்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், என்ன செய்வது? நெல் விவசாயிக்கு விளைச்சல் கிடைக்கும் காலம் வரை காத்திருக்க வேண்டும் அல்லவா? 

இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க, அனைவருக்கும் பொதுவான மாற்றுப்பொருள் வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்தனர். இதற்குத் தீர்வாக வந்ததுதான், விலை மதிப்புள்ள உலோகத் துண்டுகள். இதுவே, நாணயப் புழக்கத்தின் அடிப்படையாக அமைந்தது. 

இதன்படி, முதலாம் நபரிடமுள்ள நூறு கிலோ தக்காளியை கொடுத்துவிட்டு, அதற்குப் பதில் இரண்டாம் நபரிடமுள்ள 10 கிலோ நெல்லைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. அதற்கு பதில், குறிப்பிட்ட அளவு எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதன்பின்னர், அந்த நாணயத்தை பயன்படுத்தி, தக்காளி விவசாயி தனக்குத் தேவையான பொருட்களை, மூன்றாம் நபரிடம் போய் வாங்கிக்கொள்ளலாம். இந்த பண்டமாற்று முறையில், தங்க நாணயம் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்ட மூன்று பேருக்கும் பொதுவாக இருக்கிறது. நாணயத்தின் உதவியால், கொடுக்கல் வாங்கல் வர்த்தகமும் மிக வேகமாக நடைபெறத் தொடங்கியது.
நாணயத்தின் புழக்கம் 

கி.மு. 650ல், மேற்கு துருக்கியில் உள்ள ஐயோனியா (Ionia ) நாட்டில், முதலில் விலை மிகுந்த பொன், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்யப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு நாணயமும், 45 சதவீதம் வெள்ளியும், 55 சதவீதம் தங்கமும் கலந்து உருவாக்கப்பட்டது. இந்த நாணயம் அவரை விதையின் உருவத்தில் இருந்தது. கொடுக்கல் வாங்கலில் நாணயம் அதிக வசதியை ஏற்படுத்தியது. 

அடுத்த நூற்றாண்டில் அண்டை நாடான லிடியா (Lydia) நாட்டின் மன்னன் குரோசஸ், எலேக்டிரம் என்ற நாணயங்களை, அறிமுகப்படுத்தினார். அவற்றில் சிங்கம், காளைகளின் முத்திரைகள் பதிக்கப்பட்டிருந்தன. மிகக் குறுகிய காலத்திலயே மத்திய தரைக்கடலில் உள்ள பல நாடுகளுக்கும் நாணய செலாவணி முறை பரவத் தொடங்கியது. வியாபாரத்தில் நிலவிய பெரும் பிரச்னைகளுக்கு நாணயங்கள் தீர்வாக அமைந்தன.
நாட்கள் செல்ல செல்ல தங்கம், வெள்ளி தவிர்த்து செம்பு உள்ளிட்ட மற்ற உலோகங்களிலும் நாணயங்களை வெளியிட்டனர். அரிய வகை சிற்பம், கோடாரி போன்றவைகளும் பணமாக புழங்கிய காலங்கள் வரலாற்றில் உண்டு. இந்தியாவில், “கார்ஷாப்பணம்” என்ற முத்திரை நாணயங்களே (punch marked coins) தொடக்கக் காலத்தில் வழக்கில் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை வெள்ளியினால் செய்யப்பட்டவை. பல நூற்றாண்டுகள் வரை, பரவலாக தங்க நாணயங்கள் உலக வர்த்தகத்தின் அடிப்படையாக இருந்து வந்தது. 

பணத்தின் தோற்றம் 

ஐரோப்பிய காலனிய ஆதிக்க காலகட்டமான 16ம் நூற்றாண்டில், காகிதப் பணப்புழக்கம் முதன்முதலாக தோன்றியது. வியாபாரத்தில் அதிக அளவில் நாணயங்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தபோதும், அதிக அளவிலான நாணயங்களைச் சுமந்து செல்வதில் சிரமங்கள் இருந்தன. இதைச் சமாளிக்கும் முயற்சியாக காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டு முறை மேற்கொள்ளப்பட்டது. வட்டித்தொழில் செய்து வந்த வங்கியாளர்கள்தான் காகித பண முறை பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தனர். கடந்த 1666ம் ஆண்டு, சுவீடன் நாட்டில் உள்ள ஜோஹன் பாம்ஸ்டிரச் (Johan Palmstruch) என்ற வணிகரே முதல்முதலாக பணத்தை அச்சடித்தவராக கருதப்படுகிறார். வெள்ளி நாணயங்களை வர்த்தகர்களிடம் இருந்து வாங்கி வைத்துகொண்டு, அதற்குப் பதில் ரசீதைக் கொடுத்தார். அந்த உறுதிமொழி ரசீதில், ‘இந்த ரசீதைத் திருப்பி கொடுத்தால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையில் நாணயங்கள் திருப்பித்தருவேன் என்று உறுதியளிக்கிறேன்’ என்று வாக்களித்திருந்தார். 

ஆரம்பத்தில் இந்த முறைக்கு பெரிதாக வரவேற்பு இல்லாவிட்டாலும், தாளின் செலவாணியில் உள்ள எளிமையால் பலரும் வங்கிக்கு சென்று நாணயத்தை வரவு வைத்துவிட்டு, அதற்குப் பதில், வங்கி கொடுக்கும் காகிதத்தை வர்த்தகத்திற்கு பயன்படுத்தினர். இதுவே, பின்னர் காகிதப் பணமாக மாறியது.காகிதப் பண முறையில் பல மோசடிகள் நடைபெற்றன. இதனால், பல சமயம் வங்கிகளுக்கு ஐரோப்பிய அரசுகள் தடை விதித்தன. எனினும், காகிதப் பண முறை மறுபடியும் பரவி, உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. 

மனித இனத்தின் தேவை, காலத்திற்கும் நாகரிகத்தின் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே வருகிறது. பண்டமாற்று முறையில் ஆரம்பித்த வர்த்தகம், தற்போது பணம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை போன்றவையாக மாறி நிற்பது இப்படித்தான்.

Comments

Popular posts from this blog

உருளை சிப்ஸ் தோன்றிய சுவாரஸ்ய வரலாறு

குமிழ் வடிகட்டி – இணையதள பயனர்களின் பகைவன்