ஸ்டைலான நைலான் உருவாக்கிய கலவரங்கள்




அறிவியல் உலகை புரட்டிப்போட்ட கண்டுபிடிப்பு நைலான் என்றால் அது மிகையல்ல. நாம் துணி காயப்போடும் கயிறு தொடங்கி, குடைகள், பல்துலக்கும் மற்றும் டாய்லெட் பிரஷ்ஷின் நார்கள், பொம்மைகள், குழாய்கள் என பல்வேறு வகைகளிலும் நம்மிடையே இதன் பயன்பாடு பரவிக்கிடக்கிறது. வேதிப் பொருட்கள் சேர்க்கையால், எளிதில் சேதமடையாத வலிமையான நைலானைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த வாலேஸ் கரோத்தர்ஸ் (Wallace Carothers ) ஆவார்.




1938ல், டூ போன்ட் என்ற வேதியியல் நிறுவனத்தில் இவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். இவர், பாலிமர் எனப்படும் புரத மூலக்கூறு சங்கிலித்தொடர் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இயற்கை பாலிமரான பட்டுத்துணியில் காணப்படும் அமைடு (Amide bond) பிணைப்பை காப்பிடியக்க அவர் முயன்று கொண்டிருந்தார். அந்த அமைடு பிணைப்பை செயற்கையாக உருவாக்கி, பட்டுக்கு மாற்றமான ஒரு ஆடையை உருவாக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.

1935ல், ஆய்வகத்தில் பாலியமைட் அல்லது நைலான் எனப்படும், புரத மூலக்கூறு வரிசையை தனியாகப் பிரித்தெடுப்பதில் கரோத்தர்ஸ் வெற்றி கண்டார். ஆய்வகக் குடுவையில் சூடாக்கப்பட்ட கம்பியை, கார்பன் மற்றும் ஆல்கஹால் கலவையில் முக்கி வெளியே எடுத்தபோது, அதில் பட்டுப் போன்ற பொருள் ஒட்டி இழுபட்டு வந்தது. அதுதான் நைலான்.

1938ல் தான், உலகுக்கு நைலான் அறிமுகம் செய்யப்பட்டது. முதன் முதலாக, டூத் பிரஷ்ஷில் தான் இந்த நைலான் பயன்படுத்தப்பட்டது. ‘ஸ்டீலை போன்று உறுதியானது, சிலந்தி வலையைப் போன்று மென்மையானது’ என்று விளம்பரங்கள் செய்யப்பட்டன. 1942ல், கொசு நெட், பாராசூட், கூடாரம் என்று ராணுவத்தில் நைலான் பல்வேறு வகைகளிலும் பயன்பட்டது. எனினும், பெண்களுக்கான ஸ்டாக்கிங்ஸ் எனப்படும் நீண்ட காலுறைகளில் நைலான் பயன்படுத்தப்பட்டதை அடுத்தே, நைலான் வேகமாக பிரபலமடைந்தது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் ஸ்டாக்கிங்ஸ், மூன்றே மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது.

இதனிடையே, அமெரிக்காவில் போர் காரணமாக பொருளாதார மந்தம் ஏற்பட்டது. இதனால், பட்டுத்துணியை மக்களால் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலை உருவானது. அந்தச் சமயம் பார்த்து, விலை மலிவான பட்டுப் போன்ற நைலான் சந்தையில் இடம்பெற்றது. இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததோடு, நைலான் மீதான மோகத்தையும் பெருகச் செய்தது. எனினும் போர் காலத்தில், நைலான் உற்பத்தி வெகுவாகக் குறைந்திருந்தது.

போர் முடிவடைந்த பிறகு, நைலான் உற்பத்தி வேகமடைந்தது. ஆனால், அதைப் பொருட்களாக மாற்றுவதில் உற்பத்தியாளர்கள் திறனுடையவர்களாக இல்லை. இதனால், சந்தையில் மக்களின் தேவையை ஈடுகட்ட முடியவில்லை. பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சம்பவம், நைலான் மோகத்துக்கான நல்ல உதாரணம். 1945ல் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்து நைலான் ஆடையை வாங்க முயன்றனர். அப்போது அவர்களுக்குள் அடிதடி ஏற்பட்டு பெரும் கலவரமே ஏற்பட்டது. இவை போன்று ஆங்காங்கே நடந்த கலவரங்கள், அமெரிக்க வரலாற்றில் நைலான் கலவரங்கள் (Nylon riots) என்று அழைக்கப்படுகிறது.

தற்போது, நைலான் உடைகளுக்கு பெரிய கிராக்கி இல்லை. தொழில்நுட்ப மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணம். எனினும், நைலான் மற்ற வகைகளில் இன்னும் நமக்கு பயன்பட்டு வருகிறது. ஒரு காலத்தில், ஸ்டைலின் அடையாளமான இருந்த நைலான் ஆடை, பல கலவரங்களுக்குக் காரணமாக இருந்தது ஆச்சரியம்தான்.

Comments

Popular posts from this blog

காகிதப் பணம் தோன்றிய வரலாறு

உருளை சிப்ஸ் தோன்றிய சுவாரஸ்ய வரலாறு

குமிழ் வடிகட்டி – இணையதள பயனர்களின் பகைவன்