‘ செல்பீ ’ – முடிவு கட்டப்பட வேண்டிய பைத்தியக்காரத்தனம்

சமீபத்திய ஆய்வின் படி, சமூக வலைத்தளங்களோடு தங்களை ஐக்கியப் படுத்திக்கொண்டுள்ள டீன் பருவத்து இளைஞர், இளைஞிகள் 90 சதவீதம் பேர், செல்பீ எனப்படும் தன் பட பழக்கத்திற்கு ஆட்பவட்டவர்களாக இருக்கிறன்றனர். கேமராவை உயரமாக தூக்கிப்பிடித்து, கண்களை அகல விரித்து, கன்னங்களை உப்பி சுயமாக படம் எடுத்தால் அது செல்பீ எனப்படுகிறது. ஸ்டியோ சென்றுதான் அழகான படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையை மாற்றி, சாதாரண மனிதர்களையும் கதாநாயர்களாக கொண்டாட வைக்கும் கலாச்சாரத்தை வைக்கும் உருவாக்கிய பெருமை செல்பீயைச் சாரும். சமூக அடையாளம், படைப்பாற்றல், புகழ் என்று பல்வேறு தளங்களில் தன் பங்களிப்பை செல்பீ ஆற்றுவதாக சொல்லப்பட்டாலும், மறுபுறம் உறவு விரிசல், சுயநலம், மனநலக்கோளாறு, சமூகக் குற்றம், புகழ் வெறி ஆகியவற்றின் தலமாகவும் அது இருக்கிறது. செல்பீ என்றால் என்ன? உலகளாவிய கலாச்சாரமாக மாறியுள்ள அதன் உண்மை முகம் என்ன? அதன் கவர்ச்சிக்கு பின்னால் பொதிந்துள்ள மனோபாவம் என்ன? சமூகத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன? விரிவாக படம்பிடிக்கிறது இந்த சிறப்புக்கட்டுரை....

செல்பீயின் வரலாற்றுத்தடம்


1839-ம் வருடத்தில் ராபர்ட் கோர்னிலியஸ் என்பவர் தன்னைத்தானே எடுத்துக்கொண்டதுதான் முதல் ‘செல்பீ’ அல்லது ‘தன்படம்’. டுகரியோடைப் புகைப்படத் தொழில்நுட்பம் இருந்த காலகட்டம் அது. இப்போதுள்ளது போல், ஒரு பொத்தானை அழுத்திய கணநேரத்தில் புகைப்படம் தயாராகும் நிலை அப்போது இருக்கவில்லை. ஆரம்பகால கேமராவான டுகரியோடைப்பை பொறுத்தவரை, லென்ஸ் மூடி திறக்கப்பட்டு ஒரு நிமிடம் கழித்தே புகைப்படம் எடுக்கப்படும். சில்வர் பிளேட்டிங் (பிலிம் சுருள்களுக்கு பதிலாக அப்போது பயன்படுத்தப்பட்டது) வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ராபர்ட் கோர்னிலியஸ், தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் கொண்டு, கேமரா லென்சை திறந்தபின் கிடைத்த கால அவகாசத்தில் ஓடிப்போய் அப்புகைப்படக்கருவி முன் போய் நின்றுகொண்டார். அப்போதுதான் செல்பீயின் அத்தியாயம் ஆரம்பமாகிறது.


பின்னர், 20-ம் நூற்றாண்டின் தொடக்காலத்தில் கோடாக் பிரௌனீயின் பெட்டிக்கேமராவின் வருகையையொட்டி, செல்பீ ஆர்வம் மக்களிடையே வேகமெடுக்கிறது. நீங்கள் அந்தவகை கேமராக்களை பழைய கால சினிமாக்களில் பார்த்திருக்கலாம். நகர கதாநாயகிகள், கிராமத்திற்கு வருகை புரியும் போது தங்கள் கையில் கூடவே இந்த கேமராவையும் கொண்டு வருவர். 1913-ம் வருடத்தில், 13 வயதான ரஷ்ய இளவரசி அனஸ்தேசியா நிக்லோவ்னா கண்ணாடி முன் நின்றுகொண்டு இந்த வகை கேமராவின் உதவியோடு தன்னைத்தானே புகைப்படம் எடுத்து, அதை தன் தோழி ஒருவருக்கு அனுப்பி வைக்கிறார். அத்தோடு அவரால் எழுதப்பட்ட கடிதத்தில் புகைப்பட கருவியை தவறவிட்டு விடுவேனோ என்ற அச்சத்தால் தம் கைகள் நடுங்கியதாக கூறுகிறார்.

செல்பீ என்பது அறிந்தோ அறியாமலோ எல்லா காலகட்டத்திலும் இடம்பெற்றே வந்திருக்கிறது. நாசா க்யூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலம் சுயமாகவே புகைப்படம் எடுத்து அனுப்பும்படி நிரலாக்கம் செய்யப்பட்டு விண்வெளியில் விடப்பட்டது. விண்வெளி ஆய்வாளர்கள், வேற்று கிரகத்தில் இறங்கும்போது உடனே ஆர்வப்பட்டு தங்களைத் தாங்களே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கமும் இருந்தது. 1966இல் பஸ் ஆல்டிரின் என்பவர் விண்வெளியில் முதன்முதலில் செல்பீ புகைப்படத்தை எடுத்தார்..

பெயர் பெற்ற செல்பீ !செல்பீ புகைப்படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு தோற்றங்களில் தோன்றியிருந்தாலும், அதற்கென்று பிரத்யேக பெயர் எதுவும் சூட்டப்பட்டிருக்கவில்லை. 2002ஆம் வருடம் செப்டம்பர் 13-ம் தேதி, ஆஸ்திரேலியாவின் இணைய மன்றமான ஏ.பி.சி. ஆன்லைனிலேயே தன்னைத்தானே படம் எடுத்துக்கொள்ளும் தன் படங்களுக்கு, செல்பீ என்று பெயர்சூட்டப்பட்டது. 2013-ல் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில், ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட வார்த்தையாக செல்பீ இடம்பெற்றது.

செல்பீ - தொழில்நுட்பத் தோழி:செல்பீயின் வளர்ச்சி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒட்டியே நிகழ்ந்தது. 2006 லிருந்து 2009 வரையிலான காலகட்டத்தை, செல்பீயின் பொன்வசந்த காலம் என்று கூற வேண்டும். 2000த்தின் தொடக்க காலத்தில், குளியலறையின் கண்ணாடி முன்நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மைஸ்பேஸ் சமூக வலைத்தளங்களில் அதிகம் இடம்பெற்றன. ஆனால், அவை ரசனையில் தரம் தாழ்ந்தவை என்று உயர்தட்டினரால் நிராகரக்கப்பட்டு வந்த நிலையில், பேஸ்புக்கின் வருகை அவர்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்தது. பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள், வெகு அருகாமையில் அல்லாமல் தூர வைத்து எடுக்கப்பட்டிருந்ததோடு, மிக தெளிவாகவும், ரசனைமிக்கதாகவும் இருந்தன.

2009-ம் வருடத்தில் இளம்பெண்களின் செல்பீ படங்களால், புகைப்பட பதிவேற்றி இணையதளமான பிளிக்கர் நிரம்பி வழிந்தது. அந்நிறுவனம் மூச்சுத்திணறிப் போகும் அளவுக்கு செல்பீக்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. 2010-ஆம் வருடத்தில் ஐபோன் 4இன் வருகை செல்பீக்களை மேலும் பரவலாக்கம் செய்தது. முன்பக்க கேமரா மூலம் செல்பீக்களை இலகுவாக எடுக்க முடியும் என்பதோடு, தெளிவாகவும், தொழில்ரீதியான புகைப்படக் கலைஞரைப் போலவும் எடுக்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது. அத்தோடு Instagram, ItisMee போன்ற பிரத்யேக செல்பீ இணைய சேவைகளும் அத்தகையதொரு நிலைக்கு மேலும் வலுசேர்த்தன. செல்பீயின் உச்சம் என்று இந்த வருடத்தை குறிப்பிடலாம்.

2012 ஆம் ஆண்டு டைம் இதழ், இணையத்தள பயனாளர்களால் அதிகம் முணுமுணுக்கப்பட்ட முதல் 10 வார்த்தைகளில் செல்பீயும் ஒன்றென சொன்னது. 2013-ம் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சர்வேயில் செல்பீயின் தாக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டது. அதாவது, 18லிருந்து 35 வயது வரையிலான பெண்களில், மூன்றில் இரண்டிலொரு பாகத்தினர் செல்பீ எடுத்துக்கொண்டவர்கள்தான் என்ற உண்மை தெரியவந்தது. அதே போல், மின்னணு உற்பத்தி நிறுவனமான சாம்சங் சார்பில் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வில், 30 சதவீத இளைஞர்கள் ( 18-24) செல்பீ பழக்கத்திற்கு ஆட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.

செல்பீயின் பரவலுக்கான சமூகவியல் காரணங்கள்:எடுக்க எளிதானவை, பகிர எளிதானவை, புகைப்படம் எப்படி வரவேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை முழுக்க முழுக்க உங்களிடம் இருக்கிறது. இது போதாதா? இத்தகைய காரணங்களே, நம் சமூகத்தில் இத்தனை வேகமாய் செல்பீக்கள் பரவுவதற்கு உகந்தவையாய் உள்ளன.

மஸ்ஸாசுசேட்ஸ் உளவியல் கல்லூரியின் பேராசிரியர் பமேலா ரூட்லெஜ், செல்பீ ஏன் பரவியது என்பதைக் குறிப்பிடும் போது, “ சாதாரண மனிதர்களையும் பிரபலங்களைப் போல் கொண்டாடுகிறது. மாடல்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது எதார்த்த மனிதர்களின் புகைப்படங்களும் பரவலாக்கப்பட்டுள்ளது. உங்கள் புகைப்படங்கள் எவை இடம்பெறலாம், இடம்பெறக்கூடாது என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்” என்கிறார்.

செல்பீக்களில் பல வகை உண்டு. பிங்கீ என்றால், உடலை காயப்படுத்தி ரத்தத்தோடு எடுக்கப்படும் செல்பீ. மேலும் புலிகளுடன் எடுக்கும் செல்பீ, கழிவறையில் உட்கார்ந்து கொண்டு எடுக்கும் செல்பீ, பார்வையாளர்களை பயமுறுத்தும் செல்பீ, வெறும் உள்ளாடையோடு எடுக்கப்படும் செல்பீ, பிணங்களோடு எடுக்கும் செல்பீ என்று செல்பீக்களில் பலவகைகள் உள்ளன. பொதுவாக இவை நம் நாட்டில் இல்லை என்றாலும், மேலை நாடுகளில் இதுபோன்ற விபரீத மற்றும் கீழ்தர செய்கையை ஊக்குவிக்கும் செல்பீ கலாச்சாரம் பரவி வருகிறது. நல்லதையை விட தீயதே வெகு வேமாக பரவும் என்பதால், இத்தகைய மோசமான செல்பீக்களை நோக்கியே இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர்.

செல்பீ குறித்து இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில், 2013-ம் வருடம் பிரிங்ஹாம் பிசினஸ் ஸ்கூலால் நடத்தப்பட்ட ‘‘டேக்கர்ஸ் டிலைட்- டிஸ்க்ளோசர் அண்ட் லைக்கிங் பிகேவியர்’’ என்ற தலைப்பிலான ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ஆய்வில், செல்பீக்கள் பற்றி சில எதிர்மறையான உண்மைகள் வெளிப்பட்டது. நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் சுயபடங்களை பேஸ்புக்கில் ( பேஸ்புக் என்பது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு தளம், ஆனால் மற்ற தளங்களுக்கும் முடிவு பொருந்தும்) பதிவேற்றுகிறீர்களோ, அந்தளவுக்கு எதார்த்த வெளியில் நீங்கள் கொண்டிருக்கும் நிஜமான சமூக உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று தெரியவந்துள்ளது. செல்பீ பதிவேற்றத்துக்கும், உறவு நெருக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் என்ன சம்பந்தம் என்று நமக்கு ஆச்சரியம் ஏற்படுட்டாலும், ஆய்வு முடிவுகள் அதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. பல சமயங்களில் நகைச்சுவை என்ற பெயரிலோ, அல்லது படைப்பாற்றல் என்ற பெயரிலோ, விகாரத் தொனியில் எடுத்து பகிரப்படும் செல்பீ புகைப்படங்கள், மற்ற பயனீட்டாளர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகிறது.

மருத்துவர் டேவிட் ஹௌட்டன் கூற்றுப்படி, தொடர்ந்து புகைப்படங்களை பேஸ்புக் தளத்தில் பிரசுரம் செய்யும் ஒருவரை, அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தவிர்த்து, பிறருக்கு பிடிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது. காரணம், அந்த புகைப்படங்கள் அவர்களுக்கு அநாவசியமாக, அந்நியமாக இருந்தமையே... நாம் பதிவிடும் தகவல்களை நம் நண்பர்கள், குடும்பத்தினர், உடன் வேலைசெய்பவர்கள், தொடர்பாளர்கள் என்று அனைவரும் பார்க்கின்றனர். சிலரை குறிவைத்து நாம் பகிர்ந்துகொள்ளும் படங்கள், தகவல்கள், அத்தகையவர்களால் மட்டுமே பார்க்கப்படுவதில்லை. நண்பர்களின் நண்பர், அவரின் நண்பர் என்று சங்கிலித்தொடராக நீள்கிறது. ஆனால் இதைக் கட்டுப்படுத்துவதற்கு பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் வசதி இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு அது தெரிவதில்லை.

செல்பீயில் உள்ள முக்கியமான ஆபத்துகளில் ஒன்று, நாம் இருக்கும் இடத்தை புகைப்படத்தின் மூலம் நமது இணைய நண்பர்களுக்கும், நண்பர்களின் நண்பர்களுக்கும் என கண்டவர்களுக்கும் காட்டிக்கொடுப்பது. தகவல் உலகில், உங்கள் குறித்த அளவுக்கு அதிகமான தகவல்களை வெளியிடும் போது, அதை தவறானவர்கள் பயன்படுத்துவதற்கு அனேக வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைத்தள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாள்தோறும் உங்கள் புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்யும்போது, ஒரு தொடர் செய்திகளை நீங்கள் தருகிறீர்கள் என்று பொருள். அதனுள் அடங்கியிருக்கும் தகவல்களை தவறானவர்கள் வழிதவறிய முறையில் பயன்படுத்த நிறையவே வாய்ப்பிருக்கிறது.


ஆணாதிக்க மனோநிலையை பிரதிபலிக்கும் பெண்கள்

செல்பீயை அதிகம் எடுப்பவர்களும் பெண்களே.. அதிகம் எதிர்ப்பவர்களும் பெண்களே... என்பதுதான் செல்பீயை பெண்களோடு அதிக தொடர்புபடுத்துகிறது. சமூகவியலாளரும், பெண்ணியவாதியுமான பென் ஆக்கர், செல்பீயை பற்றி இப்படி குறிப்பிடுகிறார் – “ ஆணாதிக்கப் பார்வை வெகு வேகமாக பரவலாக்கம் செய்யப்படுகிறது ”. மற்றொரு பெண்ணியவாதியும், ஆபாச பட எதிர்ப்பாளருமான கெய்ல் டைன்ஸ், தம் மீதான கவன ஈர்ப்புக்காகவே பெண்கள் அதிக அளவில் செல்பீயை பகிர்கிறார்கள் என்றும், தங்கள் உடலழகை வெளிக்காட்டுவதன் மூலமே அத்தகைய கவனஈர்ப்பை பெற முடியும் என்று நினைப்பது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு என்று விமர்சிக்கிறார்.

2013-ஆம் ஆண்டு, பெண்கள் நலனுக்கென்ற பிரத்யேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் வலைத்தளமான ஜெஸ்ஸல் ப்ளாக்கில், எரின் க்ளோரியா ரையான் செல்பீ பின்னால் ஒளிந்திருக்கும் பெண்களின் மனோபாவத்தை கடுமையாக சாடுகிறார். அதிக லைக்குகள் மற்றும் பின்னூட்டங்கள் கிடைக்க வேண்டுமென்பதை குறிவைத்தே செல்பீ படங்களை பெண்கள் உருவாக்குவதாக கூறும் அவர், பெண்கள் ஆண்களுக்கான காட்சிப்பொருள் என்ற ஆணாதிக்க சமூக பிரக்ஞையை அது உறுதிப்படுவதாக கூறுகிறார்.

“மற்றவர்கள் என் புகைப்படத்தை லைக் செய்யும்போது என் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. நான் அழகாக இருப்பதாக உணர்கிறேன். அதனால் அழகாக இருப்பதாக உணரும் தருணங்களில் எல்லாம், நான் செல்பீ எடுத்துக்கொள்கிறேன். ” என்கிறார் ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் கவிதா.

மனநல நிபுணர் ஜில் வெபர் இத்தகைய போக்கு ஆபத்தானது என்கிறார். உங்களுடைய தன்னம்பிக்கை உங்களுக்கு கிடைக்கும் லைக்குகளையும், பின்னூட்டங்களையும் பொறுத்து அதிகரிக்கிறது என்று வைத்துக்கொண்டால், அது ஆபத்தானது. உங்களுக்கு கிடைக்கும் லைக்குகளும், பின்னூட்டங்களும் உங்கள் தோற்றத்திற்கு கிடைப்பவையே தவிர, அது உங்களின் நடவடிக்கைகளை மதிப்பிட்டு கொடுப்பது கிடையாது என்கிறார்.

குறிப்பாக இந்த மனப்போக்குக்கு பெண்கள் தான் அதிகம் ஆட்படுகின்றனர். மற்றவர்கள் தம்மை மதிக்கும் போதுதான் தாங்கள் இந்த சமூகத்துக்கு பயனுள்ளவர்கள் என்ற மனபிம்பத்தையும் அவர்கள் உருவாக்கிக்கொண்டுள்ளனர்.

கவர்ச்சி நடிகைகளின் செல்லப்பிள்ளை செல்பீ

இத்தகைய செல்பீ பட கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் முன்னணி வகிப்பவர்கள், சினிமா நடிகைகளாகத்தான் இருக்கின்றனர். இதுதொடர்பாக, ‘உமன்ஸ்’ பத்திரிக்கை ஆசிரியர் எம்மா பார்நெட் டெலிகிராஃப் செய்தி இதழில் செல்பீக்கள் குறித்து எழுதியிருந்த கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்களுக்காக வெளியாகும் லேட்ஸ் மேக் வகை ஆபாச பத்திரிக்கைகளை தடைவிதிக்க கோரும் பெண்ணியவாத அமைப்புகள் குறித்து காட்டம் தெரிவிக்கும் அவர், பெண்களை போக பொருளாக சித்தரிக்கும் வேலையை ஆபாச பத்திரிக்கைகள் மட்டும் செய்யவில்லை, இன்று இணையதளம் மூலம் பெண்களே அதை செய்துவருவதாக விமர்சிக்கிறார். தன் பெண் தோழிகள் பலர் அரைநிர்வாண அல்லது பாலின கவர்ச்சியை தூண்டும் வகையான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது குறித்து கோபம்கொள்கிறார். தங்களை பிறர் புகழ வேண்டும், மெச்ச வேண்டும் என்ற அஹங்கார புத்தியின் வெளிப்பாடு என்றும் எம்மா பார்நெட் கூறுகிறார்.

தன் மீது அளவு கடந்த பற்று கொள்வதை உளவியல் நிபுணர்கள் நார்சிசம் என்று வர்ணிக்கின்றனர். கிரேக்க புராணத்தில், ஆற்று தெய்வத்தின் மகனான நார்சிசஸ் என்பவன் தன்னை நேசித்து பிறரை வெறுத்தான். ஓடும் நீரோடை ஒன்றில் தன உருவம் கண்டு தன்னையே மோகித்து தன் உருவத்தைத் தழுவ முயன்று முடியாமல் செத்துப் போனான் நார்சிசஸ். அதிலிருந்து தன்னையே நேசித்து காதல் கொள்ளும் மனிதர்களை நார்சிஸ்ட் என்பார்கள்.

கிட்டதட்ட நார்சிசம் ஒரு மனோநிலையை ஒத்ததுதான் அளவுகடந்த செல்பீ படங்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த மனம் கொண்டவர்கள் தன்னை முன்னிட்டே பிறரை எடை போடுவார்கள்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், 100 பிரபல நடிகைகளின் அந்தரங்க கைப்படங்களை, அவர்களுடைய சமூக வலைத்தளங்களில் இருந்து திருடிய ஹேக்கர்கள் (இணையக் கொள்ளையர்கள்), அதை பொதுப்பார்வைக்கு வெளியிட்டு விட்டனர். இதுகுறித்து எஃப்.பி.ஐ. தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த புகைப்படங்களில் அதிகமானவை நிர்வாண செல்பீப் படங்கள். நடிகைகள் ஒருவகை நர்காசிஸ்ட் மனப்பான்மையுடையவர்களாக இருப்பது இதன் மூலம் வெளிப்பட்டிருப்பதாக உளவியல் நிபுணரும், “நார்சிசஸம் - தொற்று வியாதி” என்ற புத்தகத்தின் ஆசிரியருமான மருத்துவர் ஜீன் டுவென்ஜ் தெரிவிக்கிக்கிறார்.

அதிர்ச்சி தரும் “ஆபாச பழிவாங்கல்”
செல்பீயை பொறுத்தவரை மற்றொரு முக்கியப்பிரச்சினை ரிவன்ஜ் பார்ன் எனப்படும் ஆபாச பழிவாங்கல். அதாவது உடலுறவு கொள்ளுதல் போன்ற நேரங்களில், ஜோடிகள் தங்களின் அந்தரங்க நிலையை சுய படம் எடுத்து கொள்கின்றனர். அந்த இருவருக்குள் கிடைக்கும் ஒரு த்ரில்லிங் அனுபவத்துக்காக அப்படிப்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், அது பல தவறான விளைவுகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. திருமண உறவுக்கு உள்பட்ட ஒரு ஜோடி எடுக்கும் செல்பீயால் பெரும்பாலும் விபரீதங்கள் ஏற்படுவதில்லை. ஆனால், திருமணமத்துக்கு அப்பாற்பட்ட ஜோடிகள் தம் அந்தரங்க நிலையை செல்பீயாக எடுத்து வைத்துக்கொள்ளும்போது, பிற்காலத்தில் அவர்களுக்குள் மனக்கசப்போ, சச்சரவோ ஏற்பட்டு பிரிய நேரிட்டால், ஒருவர் மற்றொருவரை பழிவாங்குவதற்காக அந்தரங்க செல்பீ படங்களை அவர்களில் யாரேனும் ஒருவர் வெளியிட்டு விடுகின்றார். அதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் சில நாட்களுக்கு முன் கூட, திருமணமாகாத தமிழ் பெண் ஒருவரின் நிர்வாண படங்கள் பேஸ்புக்கில் உலவ விடப்பட்டது. அதில் சம்பந்தப்பட்டவர் பெண் பத்திரிக்கையாளர் என்பதால், அந்த செய்தி வெகு வேகமாக பரவியது. ஒருவேளை அந்த பெண் தற்கொலை செய்துகொண்டிருந்தால் எப்படிப்பட்ட விபரீதம் நிகந்திருக்கும் என்பதை நினைக்கும்போது, இந்த செல்பீயின் கோரமுகம் கண்கள் முன்னாள் வருகிறது.

இத்தகைய காரணங்களை கருத்தில் கொண்டுதான் பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல், அமெரிக்காவின் 12 மாகாணங்கள் என்று ரிவன்ஜ் பார்ன் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இணையதள பரவலாக்கம் காரணமாக, இத்தகைய ஆபாச பழிவாங்கல் சம்பங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இங்கித உணர்வற்ற செல்பீ பிரியர்கள்அத்தோடு இங்கித உணர்வற்றவனாகவும் ஒரு மனிதனை செல்பீக்கள் மாற்றிவிடுகின்றன. சமீபத்தில் தென் ஆர்ப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற நெல்சன் மண்டேலாவுக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சியில், ஒபாமா செல்பீ எடுத்து உலகத்தலைவர்களையும், பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்தார். இங்கிலாந்து பிரமதர் டேவிட் காமரூன், டேனிஷ் பெண் பிரதமர் ஹெல்லே தோர்னிங், ஆகியோருடன் ஒபாமா தனது ஐபோன் கேமராவின் உதவியோடு செல்பீ எடுத்தார். ஓர் அடிப்படை மேடை நாகரிகமும் இன்றி, தனது மனைவியை பக்கத்தில் அமர்த்தி வைத்துக்கொண்டு இன்னொரு பெண்ணுடன் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அவர் செல்பீ எடுத்துக்கொண்ட காட்சி, மிஷெல் ஒபாமா உள்பட அங்கு குழுமியிருந்த உலகத் தலைவர்கள் என சகலரையும் எரிச்சலடைய வைத்தது.

இதுகுறித்து கடும் விமர்சனத்தை பதிவு செய்த பிரிட்டன் அரசியல் விமர்சகரும், பத்தி செய்தியாளருமான லெய்ன் மார்ட்டின், டெய்லி டெலிகிராஃப் பத்திரிக்கையில், கோமாளிகளை போல் நடந்துகொள்வதற்கு ஒபாமாவையும், கேமரூனையும் தூண்டியது எது என்று கேள்வியெழுப்புகிறார். ஒரு அஞ்சலி நிகழ்ச்சியில் எப்படி இங்கிதத்தோடு நடந்துகொள்வது என்பது கூட தெரியாத தன்முனைப்பு கொண்ட சிறுபிள்ளைகள் என்று சாடுகிறார்.

இந்தியப் பிரதமர் மோடியும் செல்பீக்கு விதிவிலக்கல்ல. சென்ற பொதுத்தேர்தலில் காந்திநகர் தொகுதியில் வாக்களித்து விட்டு வெளியே வந்த அவர், தனது கட்சி சின்னத்துடன் செல்பீ எடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அதற்காக இன்னாள் மேதகு பாரத பிரதமர் மீது வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு செல்பீயின் வெறி தலைக்கேறினால் என்ன நடக்குமென்பதை, மூன்று இளைஞர்கள் நிரூபித்தனர். 1135 அடி உயரமுள்ள ஹாங்கா ங்க் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் உச்சிக்கு ஏறிய அவர்கள், அங்கிருந்து செல்பீ வீடியோ செய்தனர். பார்ப்பவர்களை தலை கிறுகிறுக்க வைக்கும் இந்த வீடியோ காட்சி, யூ டியூபில் 30 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

மனநல கோளாறுஇது ஈகோ சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, மற்றொரு ரீதியில் மனநல பிரச்சினையாகக் கூட மாறும் என்கிறார் மனநல மருத்துவர் டேவிட் வியல். டைம் இதழின் படி, செல்பீ எடுக்குமாறு ஏற்படுத்தப்படும் மனநெருக்கடி, ஒருவகை மனநோயே.

மனநல மருத்துவர் டேவிட் வீல் கருத்தின்படி, செல்பீக்கள் நாம் நினைப்பதை விட பயங்கர ஆபத்துகளை விளைவிக்க கூடியது. இங்கிலாந்தை சேர்ந்த 19 வயதான டேனி பௌமேன், பாடி டிஸ்மார்ஃபிக் டிஸ்ஆர்டர்- (உடலுறுப்புகள் குறித்த மிகக் கடுமையான தாழ்வு மனப்பான்மை) மற்றும் ஓ.சி.டி. நோயால்( கட்டுப்பாடின்றி செல்பீ புகைப்படம் எடுத்துத் தள்ளிக்கொண்டே இருக்க உந்தும் ஒருவகை மன நோய்) பாதிக்கப்பட்டு, தனது பள்ளிப்படிப்பு, எதிர்காலம் என அனைத்தையும் தொலைத்துவிட்டவர். டேனி பௌனுக்கு மாடலாக வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாளாகவே உண்டு. இதற்காக அவர் செல்பீ புகைப்பட எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். ஆனால், மாடலாவதற்கு போதிய தகுதிகள் இல்லை என்ற ரீதியில், நண்பர்கள் பின்னூட்டங்கள் இட்டுள்ளனர். இதனால், உடல் இளைப்பதோடு, தனது மேனியையும் பளபளப்பாக்குவது என்ற முடிவு எடுத்துக்கொண்ட டேனி, அதற்காக கடுமையான பயிற்சியோடு, தினமும் தன்னைத்தானே செல்பீ எடுத்துத்தள்ள தொடங்கியிருக்கிறார். முதலில் நாளொன்றுக்கு 10 என்று தொடங்கிய அவர், சில மாதங்களில் நூற்றுக்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்துத்தள்ள தொடங்கிவிட்டார். அதோடு 13 கிலோ உடல் இளைத்துவிட்டார். நாளடைவில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல், செல்பீயிலேயே மூழ்கினார். ஆயிரக்கணக்கான செல்பீக்களை எடுத்துத் தள்ளினாலும், அதில் ஒன்றுகூட அவரை திருப்திப்படுத்தும் விதத்தில் இல்லை. இதனால், ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த அவர், தற்கொலை செய்ய முயன்று மாத்திரைகளை விழுங்கினார். இறுதியில், அவர் மனநல மருத்துவமனையில் உட்படுத்தப்பட்டு, 6 மாத கால சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்தார். தற்போது செல்பீக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

செல்பீக்கு எதிராக தடைமுதற்கட்டமாக நியூயார்க்கில் புலிகளுடன் செல்பீ எடுத்துக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிண்டர் என்கிற டேட்டிங் இணையதள பயனர்கள், புலிகளுடன் செல்பீ எடுத்துக்கொள்வதை வீரத்தின் அடையாளமாக அறிவித்து, மிருகக்காட்சி சாலைகளுக்கு படையெடுத்தனர். ஏராளமானோர் புலிகளுடனான செல்பீக்களை பதிவேற்றி, பெண்களை கவர முயற்சி செய்தனர். ஆனால், அவ்வாறு முயற்சி செய்த பலரை புலி காயப்படுத்திய சம்பவங்களும் நடைபெற்றன. இதன் விபரீதத்தை உணர்ந்த நியூயார்க் மாகாண அரசு, புலிகளுடனான செல்பீக்களுக்கு தடை விதித்தது. ஆனால் கரடி, குரங்குகளுடன் செல்பீ எடுப்பதற்கு அங்கு அனுமதி இருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?

நம் சமூகத்தில் நமக்கான அடையாளத்தை தேடுவதென்பது நல்ல ஆரோக்கியமான விஷயம்தான். டீன் பருவத்தினர் அதை சமூக வலைத்தளங்களின் ஊடாக செய்யும்போது, அவர்களுக்கான அடையாளத்தை எளிதாக பெறுகின்றனர். தங்கள் எண்ணங்களை வெளியிடுகின்றனர். ஆனால், விரைவில் இந்த நிலை உங்கள் கையை மீறி போய்விடுகிற போது அது ஆபத்தாக முடிந்துவிடுகிறது. ஒரு காலகட்டத்தில் நீங்கள் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். உங்களுக்கு அதிகமான லைக்குகளும், பின்னூட்டங்களும் கிடைக்கும்போது மகிழ்வுறும் நீங்கள், அது கிடைக்காத போது அதே அளவுக்கு பாதிக்க ப்படுகிறோம்.

நீங்கள் உங்கள் செல்பீ படங்களை பொழுதுபோக்குக்காக பிரசுரிக்கிறீர்கள் என்றால் அது தவறல்ல. ஆனால், அதை பின்னூட்டங்கள் பெறும் நோக்கில் செய்தீர்கள் என்றால், உடனே அந்த செய்கையிலிருந்து பின்வாங்க வேண்டும் என்கிறார் வெபர். பயணம், வாசிப்பு, நடனம், மெஹந்தி போன்ற படைப்பாற்றல் அல்லது சிறப்பு மிக்க தருணங்களை நீங்கள் படமாக பதிவேற்றம் செய்தால் அதில் தவறு கிடையாது. ஆனால், அதிக தன்முனைப்போடு அதை செய்யும்போது, நாளடைவில் மனக்கோளாறாக மாற வாய்ப்புள்ளது.

நன்கு பாதுகாப்பாக உணரும் மனிதர்கள், குறைவான அளவே செல்பீ புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதாக உளவியல் நிபுணர் லூசி ஹெம்மான் கூறுகிறார். அத்தகைய புகைப்படங்களும், சாதாரணமானவையாக, மிகைப்படுத்தப்படாதவையாக இருப்பதாக தெரிவிக்கும் அவர், பாதுகாப்பாக உணராதவர்கள், உள்ளூர பாதுகாப்பு அச்சத்தை உணரக்கூடியவர்கள் செயற்கையான தோற்றங்களில், கவனஈர்ப்பை பெறும் வகையிலான புகைப்படங்களை பிரசுரிப்பதாக தெரிவிக்கிறார்.

மொத்தத்தில் அளவுக்கு மிஞ்சிய செல்பீயால் உறவுகளில் விரிசல் ஏற்படக்கூடும். நீங்கள் தனிமைப்படக்கூடும். பாலியல் சம்பந்தபட்ட ச ச்சரவுகளுக்கு உள்ளாக்கப்படலாம். இவ்வாறு அனேக பிரச்சினைகள் உள்ள செல்பீ கலாச்சாரத்தை அதிகம் கொண்டாடாமல், கொஞ்சம் விலகி நின்று எச்சரிக்கையோடு அணுகுவதே அறிவு.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

செல்பீயும் குட்டைவால் குரங்கும்

குட்டைவால் கருங்குரங்கின் செல்பீ படங்கள் ஏற்படுத்திய சர்ச்சைதான்  செல்பீக்களால் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவங்களில் என்றென்றும் தலையாயது. டேவிட் ஸ்லாட்டர் என்ற தொழில்ரீதியான புகைப்பட கலைஞர், குட்டைவால் கருங்குரங்குகளின் வாழ்வியல் சம்பந்தப்பட்ட (Crested Black Macaque) புகைப்பட பதிவுகளுக்காக இந்தோனேஷியா செல்கிறார். எதேச்சையாக ஒரு குரங்கு, அவரது கேமராவை களவாடிச் சென்று ஏராளமான புகைப்படங்களை எடுத்துத் தள்ளியது. பின்னர், அந்த கேமராவை ஒருவழியாக மீட்டு, அதை ஆராய்ந்த போது அதற்குள் குரங்கால் எடுக்கப்பட்ட செல்பீ படங்களும், தன் பெண் தோழியின் (அதுவும் குரங்குதான்) புகைப்படங்களும் இருப்பதை டேவிட் ஸ்லாட்டர் கண்டறிந்தார். அந்த புகைப்படங்கள் உலகப்புகழ் பெற்றன. ஆனால், அந்த புகைப்படங்களுக்கு உரிமைதாரர் யார் என்கிற சர்ச்சை அதைவிட பெரிதாக, பூதாகரமாக வெடித்தது. பல இணைய வழி நிறுவனங்கள், அந்த புகைப்படங்கள் குரங்கினால் எடுக்கப்பட்டதால் அதற்கு டேவிட் ஸ்லாட்டர் உரிமை கொண்டாட முடியாது என்றன. ஆனால், டேவிட் ஸ்லாட்டரோ, தன்னுடைய கண்காணிப்பிலேயே அந்த குரங்கு புகைப்படம் எடுத்ததாக வாதிட்டார். இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாக அது இருந்து வருகிறது.

செல்பீயின் விபரீதங்கள்செல்பீக்குள் ஒருவர் மூழ்கும் போது தம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதையே மறந்துவிடுகிறார். இதனால், பல விபரீத சம்பவங்களும் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.

· ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தை சேர்ந்த செனியா நட்யேவா என்ற 17 வயது பெண், ரயில்வே மேம்பாலத்தில் ஏறிநின்று வித்தியாசமான செல்பீ புகைப்படத்தை எடுக்க முயற்சித்துள்ளார். அது இரவு நேரம் என்பதால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், அங்கிருந்த உயர்அழுத்த மின்சார கம்பிகளை பிடித்ததால் உடல்கருகி உயிரிழந்தார்.

· அமெரிக்காவில், 32 வயதான கோர்ட்னி சான்போர்ட் என்பவர், நெடுஞ்சாலையில் கார் ஓட்டிக்கொண்டே செல்பீ எடுத்து, அதை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அத்தோடு “இந்தப்பாடல் என்னை மகிழ்வூட்டுகிறது” என்று ஸ்டேட்டஸ் போட்ட அடுத்தநொடி கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இதில் காருடன் வெடித்து அவர் உயிரிழந்தார்.

· கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவனான எட்வின், ஓடும் ரயிலின் அருகே நின்று செல்பீ எடுக்க முயற்சித்த போது, ரயில் மோதி உயிரிழந்தான். சகோதரன் மற்றும் நணபர்கள் முன்னிலையே எட்வின் உயிர் நீத்தான்.

· மெக்சிக்கோவில் 21 வயதான ஆஸ்கார் ஒட்டேரோ கிலார் என்பவர் தன்னுடைய இரு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, துப்பாக்கியை தலையில் வைத்து விளையாட்டாக செல்பீ எடுத்துள்ளார். செல்பீ ஆர்வத்தில் டிரிக்கரை அழுத்தியதில் அவர் தலை வெடித்து சிதறியது.

· போர்ச்சுகலில், தங்கள் பிள்ளைகளின் கண்கள்மன்னிலையிலேயே பள்ளதாக்கில் தவறி விழுந்து பெற்றோர்கள் உயிரிழந்தனர். செல்பீ ஆர்வத்தில் தடுப்புச் சுவர் மீதேறியதே இந்த சம்பவத்திகு காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 

· இத்தாலியில், பள்ளிச்சுற்றுலா சென்ற 16 வயது சிறுமி இசெபெல்லா, செல்பீ எடுத்துக்கொள்வதற்காக கடல் கோட்டையின் நுனிக்கு சென்றபோது கீழே தவறி விழுந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்தார்.

· அமெரிக்காவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணான கோலட் மொரேனோ, தனது தோழியுடன் பேச்சிலர் பார்ட்டி ஒன்றிற்காக காரில் சென்றபோது, செல்பீ எடுத்ததோடு, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளார். ஆனால் கவனக்குறைவாக சென்றதால், எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி திருமணப் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Comments

Popular posts from this blog

காகிதப் பணம் தோன்றிய வரலாறு

உருளை சிப்ஸ் தோன்றிய சுவாரஸ்ய வரலாறு

குமிழ் வடிகட்டி – இணையதள பயனர்களின் பகைவன்