கில்லட் ஏற்படுத்திய ஷேவிங் புரட்சி



நவீன காலத்தில், ஐரோப்பாவில் தாடி மழிப்பது, தூய்மைக்கான அடையாளமாக மாறியது. இதனால், 1800 லிருந்து 1900 வரை சவரத்தை எளிமையாக்கும் முயற்சிகள் நடந்தன. திறமையான முடிதிருத்துனருக்கான தேவை பெருகியது. சுயமாக சவரம் செய்ய முயற்சித்தவர்களுக்கு, முகத்தில் ஆங்காங்கே வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. சவரத்துக்கு முன்பு, வெந்நீர் போட்டு தாடி முடிகளை மென்மையாக்குவது, கிரீம் போட்டு மிருதுவாக்குவது என்று ஏராளமான வேலைகளை முடிதிருத்துனர் செய்ய வேண்டியிருந்தது. ஒரு சவரத்துக்கு குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும். கொஞ்சம் அவசரப்பட்டாலும், முகத்தில் வெட்டுக்காயம் தான்.

1880ல் கெம்ப்ஃபே சகோதரர்கள், சுய சவரத்துக்கான ‘ஷெஃபீல்டு சவரக்கத்தி’யை (Sheffield Razor) அறிமுகப்படுத்தினர். அழகாக காட்சியளிக்கும் இந்த ரேஸரில், ஒரு வளைவான கூர்மையான ஸ்டீல் பிளேட் இருக்கும். அதைப் பயன்படுத்தாதபோது அந்த பிளேட் ரேஸரின் கைப்பிடிக்குள் மடங்கி ஒளிந்துகொள்ளும். சுயசவரம் என்றாலும், இதை மிக ஜாக்கிரதையாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

அதேபோல், ஒவ்வொரு முறையும் உள்கத்தியை கழற்றி, அதை கல்லில் உரசி கூர்மை செய்ய வேண்டியிருந்தது. இந்தக் குறையை போக்கி, சுய சவரத்தை உண்மையிலேயே எளிமையாக்கியது, கிங் கேம்ப் கில்லட் என்பவர் தான்.

அமெரிக்காவைச் சேர்ந்த இவர், மூன்று துளைகளுடன் கூடிய சதுர வடிவிலான பிளேடை அறிமுகம் செய்தார். இதை தேவையான போது சவரக்கைப்பிடியில் பொருத்தி சவரம் செய்து கொள்ள வேண்டியதுதான். கூர்மை மழுங்கும்போது, தூக்கி வீசிவிடலாம்.

1906ல், இரட்டை கூர்மைமுனை கில்லட் பிளேடுகள் எவ்வளவு விற்பனையானது தெரியுமா? 3 லட்சம். அமெரிக்கா ராணுவத்துறை அவரின் பிளேடுகளை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. ஒவ்வொரு ராணுவ வீரரும் மழமழவென்ற முகத்துடன் காட்சியளித்தனர். இது கில்லட் என்ற பிராண்ட் பெயரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. 



அதன்பிறகு இரண்டடுக்கு பிளேடு, மூன்றடுக்கு பிளேடு என்று கில்லட் முன்னேறி சேஃப்ட்டி ரேசர் எனப்படும் பாதுகாப்புமிக்க சவரக்கத்தி தொழில்நுட்பத்தில் வீறுநடை போட்டுக்கொண்டிருந்தது.

இன்று ஒரே நிமிடத்தில் சவரம் செய்து வழவழப்பான முகத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால், இது ஒரு கலையாக இருந்தது என்பது, வரலாற்றை படிப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

*************************************************************


  • மத்திய காலம்: கி.பி. 600ல், இஸ்லாமியர்களிடையே தாடி வைக்கும் பழக்கத்தை முகமது நபி ஏற்படுத்தினார். 
  • கி.பி. 1500: புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவ மதகுருமார்கள் பலரும், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு மாற்றாகத் தாடியை வைத்தனர். 
  • கி.பி. 1770: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முடி திருத்துனரான (Barber) ஜீன் ஜப்பான் பெர்ரெட், சுய மழித்தல் கலை எனும் தலைப்பில் புத்தகம் எழுதினார். மரக் கைப்பிடியுடன் பாதுகாப்பான சவரக்கத்தியைக் கண்டுபிடித்தார். 
  • 1789- – 1861: முதல் 15 அமெரிக்க அதிபர்கள் தாடியை மழ மழவென மழித்துக் காணப்பட்டனர். ஆப்ரஹாம் லிங்கன் தான் தாடி வைத்த முதல் அதிபர். 
  •  கி.பி. 1800 : நீளவாக்கிலான ஸ்டீல் சவரக்கத்திகள் பிரபலமாகத் தொடங்கின. ஒவ்வொரு முறையும் தோள்துணியில் கத்தியின் முனையை கூர்மைப்படுத்தியே, சவரம் செய்ய வேண்டியிருந்தது. 
  • 1895: அமெரிக்காவைச் சேர்ந்த வியாபாரியான கிங் கில்லட் என்பவர், பாதுகாப்பான பிளேடுகளை அறிமுகப்படுத்தினார். அதை ஒவ்வொரு முறையும் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை.
  • 1913- – 2017- அனைத்து அமெரிக்க அதிபர்களும் தாடி வைத்திருக்கவில்லை. 
  • 1928 - ஜேக்கப் ஷிக், மின் சவரக்கத்தியைக் (Electric Razor) கண்டுபிடித்தார். 
  • 1930 - அமெரிக்க ராணுவ வீரர்கள், தாடி வைக்க தடை போடப்பட்டது

Comments

Popular posts from this blog

காகிதப் பணம் தோன்றிய வரலாறு

உருளை சிப்ஸ் தோன்றிய சுவாரஸ்ய வரலாறு

குமிழ் வடிகட்டி – இணையதள பயனர்களின் பகைவன்