194 கி.மி. காரை தனியே ஓட்டிச் சென்ற முதல் ஓட்டுனர் ஒரு பெண்!


இ ன்றைக்குப் புகழ்பெற்ற கார்களில் ஒன்று, பென்ஸ்.  அதுதான் உலகில் உருவாக்கப்பட்ட முதல் பெட்ரோல் காரும்.  அதை உருவாக்கி விற்பனைக்குக் கொண்டு வரும் வரை எவ்வளவு செலவுகள் ஏற்பட்டிருக்கும்... அத்தனைக்கும், அந்த கார் கண்டுபிடிப்பாளரான கார்ல் பென்சுக்கு நிதியுதவி செய்தவர் அவர் மனைவி பெர்த்தா பென்ஸ். அதுமட்டுமல்ல, காரை எந்தளவுக்கு நம்பி வாங்கலாம். பாதுகாப்பாக இருக்குமா?, நீண்ட தூரம் பயணிக்க முடியுமா என்றெல்லாம் மக்கள் கொண்ட சந்தேகங்களுக்கு, தனது அதிரடித் திட்டத்தின் மூலம் விடை சொன்னவரும் அந்த வீரமிகு பெண்மணியே.

சாதனைப் பயணம்

பென்ஸ் உருவாக்கிய காரில் 194 கிலோ மீட்டர் தனியே பயணம் செய்து, அவர் ஆட்டோமொபைல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார். காரைக் கண்டுபிடிக்கத் தெரிந்த கார்ல் பென்சுக்கு, அதை வணிகம் செய்யத் தெரியவில்லை. பெர்த்தா பென்ஸ், அதைத் திறம்பட செய்தார். தனது, இரண்டு மகன்கள் யூகனையும் (15 வயது) ரிச்சர்ட்டையும் (13 வயது) அழைத்துக்கொண்டு, பென்ஸ் தயாரித்த காரில் பயணத்தைத் தொடங்கினார். அதிகாரிகளிடமோ, கணவரிடமோ சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டார்.

உண்மையில், இது யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு ரிஸ்க். ஜெர்மனியின் மேன்ஹீம் என்ற இடத்தில் இருந்து, தனது தாய்வீடான ஃபோர்சீம்முக்கு புறப்பட்டார். அவர் பயணம் செய்த காரில், எரிபொருள் டாங்கின் கொள்ளவு எவ்வளவு தெரியுமா? வெறும் 4.5 லிட்டர்கள்தான். அப்போது காருக்குப் பயன்படுத்தப்பட்ட எரிபொருள், மருந்து விற்பனைக் கடையில் மட்டும்தான் கிடைக்கும். இதனால், இடையிடையே மருந்துக் கடைகளில் வண்டியை நிறுத்தி, லிக்ராய்ன் என்ற திரவத்தை நிரப்பிக்கொண்டே இருந்தார்.

தடைகளை உடைத்திடு!

திடீரென்று எரிபொருள் ஓடுபாதையில் அடைப்பு ஏற்பட்டது. சாதுர்யமாக அதைத் தனது கொண்டை ஊசி உதவியுடன் சரிசெய்தார். கார் சக்கரத்தின் செயின் அறுந்துபோனது. அசராமல், காரை கொல்லுப்பட்டறைக்குத் தள்ளிக்கொண்டு போய் செயினை ஒட்டவைத்தார்.

மரத்தால் ஆன பிரேக் கட்டை செயல்படாமல் போனது. விடாமல், தோல் பட்டைகளைப் பொருத்தி பிரேக்கை இயக்கினார். இதுவே, உலகின் முதல் பிரேக் பேட்டாகக் (Break Pads) கருதப்படுகிறது.

குளிரூட்ட உதவும் நீர்தொட்டியில் அடிக்கடி நீரை நிரப்ப வேண்டியிருந்தது. மிகக் கவனமாக அதைச் செய்தார். மலைமேட்டில் ஏறும்போது, காரில் இருந்த இரண்டு கியர்கள் போதவில்லை. இதனால், மகன்களை காரைத் தள்ளவிட்டு, மலைமேல் ஏற்றினார். ஒருவழியாக தாய்வீட்டிற்குச் சென்று சேர்ந்தபோது மாலை சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது. உண்மையில், அதுதான் ஆட்டோமொபைலின் எதிர்காலம் உதமயமாகிக் கொண்டிருந்த நேரம்.

வெற்றியின் தந்தி

வெற்றிகரகமாகப் பயணத்தை முடித்த செய்தியை, தனது கணவருக்கு தந்தி அடித்தார். சில நாட்களில், மீண்டும் தனது இல்லத்துக்குப் பயணத்தைத் தொடங்கி பத்திரமாக மகன்களுடன் வந்து சேர்ந்தார் பெர்த்தா. அவர் பயணம் செய்த மொத்த தூரம் 194 கிலோ மீட்டர்கள்.

பெர்த்தா மற்றும் அவரது மகன்கள், தானாக ஓடும் காரில் வேகமாக செல்வதைப் பார்த்து, பேய்கள் தான் ரதத்தில் செல்கின்றனவோ என்று பொதுமக்கள் கருதினார்கள். மூவரும் காரில் பயணம் செய்த செய்தி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணே தனியாக பயணம் மேற்கொள்ளும்போது, காரை பயன்படுத்துவதில் இனியென்ன தயக்கம் என்ற முடிவுக்குப் பலரும் வந்தனர்.

பக்குவப்பட்ட கார்

பயணத்தில் தாம் எதிர்கொண்ட சிரமங்களை எல்லாம் கணவரிடம் ஒவ்வொன்றாகச் சொன்னார் பெர்த்தா. இன்னொரு கியர் வைக்க வேண்டும், பிரேக் பிடிக்கும் சக்தியைக் கூட்ட வேண்டும், டாங்க் வசதியை அதிகரிக்க வேண்டும் என்று பல ஆலோசனைகளைக் கூறினார் பெர்த்தா. இன்று நாமெல்லாம் சொகுசாக காரில் போக, பெர்த்தா என்ற பெண்ணின் தைரியமான ஒரு பயணம் முக்கியக் காரணமாக இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது.

கார்ல் பென்ஸ் தனது மனைவி குறித்து சொன்ன வார்த்தைகள் இவை, ‘என் வாழ்க்கை எனும் சிறு படகு, மூழ்கிவிடுவது போல் தெரிந்த நேரத்தில், என்னுடன் ஒருவர் மட்டும்தான் இருந்தார். அவர் என் மனைவி. தைரியமான மற்றும் உறுதியான முடிவால், புதிய பயணங்களுக்கான நம்பிக்கையை அளித்தார்’ என்றார் கார்ல் பென்ஸ்.

Comments

Popular posts from this blog

காகிதப் பணம் தோன்றிய வரலாறு

உருளை சிப்ஸ் தோன்றிய சுவாரஸ்ய வரலாறு

குமிழ் வடிகட்டி – இணையதள பயனர்களின் பகைவன்