குச்சி ஐஸ்ஸை உருவாக்கிய 11 வயது சிறுவன்
குழந்தைகள் முதல் குச்சி ஊன்றி நடக்கும் கிழவர்கள் வரை குச்சி ஐஸ் விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். இன்று உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் குச்சி ஐஸ் செய்முறையை கண்டுபிடித்தது, வெறும் 11 வயது சிறுவன்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த ஃபிராங்க் எப்பர்சன் என்ற 11 வயது சிறுவன் எதேச்சையாக கண்டுபிடித்ததுதான் குச்சி ஐஸ். ஒருநாள், அவனுடைய வீட்டுக்கு வெளியே, சோடா பவுடர், நீர் மற்றும் அவற்றை கிளறும் குச்சி ஆகியவற்றை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான் சிறுவன். ஒருகட்டத்தில், சோடா கலவை நீர் மற்றும் குச்சியை அங்கேயே மறந்து விட்டு, எப்பர்சன் தூங்கப் போய்விட்டான். அடுத்த நாள் காலை, அங்கு வந்த பார்த்த சிறுவனுக்கு, ஒரே ஆச்சர்யம். அவன் வைத்துவிட்டு போன சோடா தண்ணீர் அப்படியே உறைந்து போய் கிடந்தது. காரணம், அது குளிர்காலப் பருவம். மைனஸ் டிகிரியில் அடித்த குளிர்காற்றால், சோடா நீர் ஐஸ் கட்டியாக மாறிப்போயிருந்தது. அதை எடுத்து நக்கி பார்த்த எப்பர்சன் அதன் சுவையில் மயங்கிப்போனான். அன்று இரவும் அதேபோல், சோடா நீரை உறைய வைத்து தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அதை அறிமுகம் செய்தான் எப்பர்சன்.
அதீத சுவை கொண்ட அந்த பொருள் நன்றாகவே இருக்கவே, அந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை (கண்டுபிடிப்புக்கு தான்தான் உரிமையாளர் என்று சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளுதல்) கோருமாறு அவனது பெற்றோர் அறிவுரை வழங்கினர் . எப்பர்சனும் குச்சி ஐஸுக்கு காப்புரிமை பதிவு செய்து, அதற்கு "எப்ஸிக்கல்" (Epsicle) என்று பெயரிட்டான். இதைத்தொடர்ந்து, கலிபோர்னியாவில் கம்பெனி தொடங்கி, குச்சி ஐஸ் விற்பனையை தொடங்கினான். பின்னர், பாப்ஸிக்கல் (Popsicle) என்று குச்சி ஐஸ்ஸுக்கு பெயர் மாற்றப்பட்டது.
சிறிது காலத்திற்குள்ளாகவே, அமெரிக்கா முழுவதும் பாப்பிசல் எனும் குச்சி ஐஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விருப்ப பொருளாக மாறி, அனைவரும் சளித்தொல்லையால் அவதிப்படும் அளவுக்கு வாங்கி சுவைத்தனர். பொதுமக்களின் வரவேற்புக்கு ஏற்ப குச்சி ஐஸ்ஸிலேயே பல மாற்றங்கள் செய்து, அதன் வண்ணங்களிலும், நறுமணங்கள், சுவைகளிலும் புதிய வெரைட்டிகள் கொண்டு வரப்பட்டன.
இது, 11 வயது சிறுவனின் எதேச்சையான கண்டுபிடிப்பாக இருந்தாலும், உலகம் முழுவதும் குச்சி ஐஸ் ஏற்படுத்திய தாக்கத்தை நினைத்தால் வியக்காமல் இருக்க முடியாது. உலகளவில், ஆண்டுக்கு இருநூறு கோடி குச்சி ஐஸ் விற்கப்படுகிறது என்றால், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

Comments
Post a Comment