தினம் தினம் முஸ்லிம்களை தீக்குளிக்க கோரும் ராமர்களுக்கு மனம் திறந்த மடல்.


ராமனிடம் தன் புனிதத்தை நிரூபிக்க சீதை ஒருமுறைதான் தீக்குளித்தாள்... ஆனால் இந்திய முஸ்லிம்களோ தாங்கள் தீவிரவாதிகள் இல்லை என்பதை நிருபீக்க தினந்தினம் தீக்குளிக்க வேண்டும் என்று கோரி இஸ்லாமியர்களுக்கு மனம் திறந்த மடல் எழுதும் அன்பர்களுக்கு எம் வேதனை கலந்த ஒரு பதில் மடல்...

குரூர குண்டுவெடிப்புகளையும், பள்ளிக்கூட தாக்குதல்களையும் வெகுஜன முஸ்லிம்கள் ஆதரிப்பதாக இந்து உள்ளிட்ட பிற பெரும்பான்மை சமுதாயத்தினர் நினைத்துவிடக் கூடாது என்ற அக்கறையில், முஸ்லிம்கள் ஏன் இந்த தீவிரவாத சம்பவத்தை கண்டிக்கவில்லை, அந்த தீவிரவாத சம்பவத்தை கண்டிக்கவில்லை என்று ஆதங்கப்படும் அன்பர்களின் பதபதைப்பை எங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இல்லை. சொல்லப்போனால்  அவர்களை விட எங்களுடைய பதைபதைப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. இந்திய ராணுவத்தினரின் தலை பாகிஸ்தான் ராணுவத்தினரால் துண்டிக்கப்பட்டுவிட்டால், உலகில் எந்த மூலையிலேனும் எந்த தொய்பா அமைப்பாலேனும் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு விட்டால் நம் அலுவலகத்தில் கேள்வி கேட்பார்களே, நம் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் கேலி செய்யப்படுவார்களே, மனைவிமார்கள் அண்டைவீட்டார் ஏளன பார்வைக்கு ஆட்படுவார்களே என்ற பதைபதைப்பும், பயமும் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் என்ன செய்வது? யாரிடம் சொல்லி முறையிடுவது?

ஊடக அறிநெறியின் குரல்வளை மீதேறி நின்றுகொண்டு, குண்டுவெடிப்பு உள்ளிட்ட இஸ்லாமியன் சம்பந்தப்படுத்தப்பட்ட எந்த செய்தியையும் திரித்து, குரூர உற்சாகத்தோடு எழுதும் ஊடகங்களிடமே மறுபடியும் சென்று முறையிடுவதா? நாடு பிடிக்கும் ஆசையில் ஆயுதமும் பயற்சியும் அளித்து தாலிபன்களை உருவாக்கிய அமெரிக்காவின் பக்கம் நம் கைகளை நீட்டிவிட்டு அமைதியாக இருந்துவிடுவதா? நிறையவே அவற்றை செய்து சோர்ந்தாகிவிட்டது. வேறுவழியில்லை, முஸ்லிம்களே தெருவில் இறங்கி தாங்கள் தீவிரவாதிகள் இல்லை என்பதை சொல்லலாம் தான்... சொல்ல வேண்டும் என்ற உங்கள் புத்திசாலித்தனமான யோசனையை முஸ்லிம்களாகிய நாங்கள் வரவேற்காமல் இல்லை. ஆனால் அதற்கு முன்னால் சில சமூக எதார்த்தங்களை நினைத்தும் மனம் புதிரடைவதை தவிர்க்க முடியவில்லை. புதிய சிலுவைப் போர் என்று வருணித்து ஈராக் ஆக்கிரமிப்பை அமெரிக்க கிறிஸ்தவர்கள் நிகழ்த்திய போது, இந்தியப் பாதிரியாளர்களிடம் பேரணி நடத்த வேண்டும் நாம் கோரியதாக எதுவும் நினைவுக்கு வரவில்லை.

இலங்கையில் பவுத்தன் இன அழிப்பை நடத்தியபோது இங்குள்ள புத்த துறவிகள் தெருவில் இறங்கி கண்டன முழக்கங்கள் இட வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுத்ததாக தெரியவில்லை. மூவாயிரம் முஸ்லீம்கள் குஜராத்தில் கொல்லப்பட்டபோதும், இந்துக்கள் அனைவரும் தாங்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை நிருபீக்க எந்த இந்து தலைவர்களையும் அறிவுஜீவிகள் அழைத்ததாக நாங்கள் படிக்கவில்லை. அப்படி செய்யாததை நாம் குற்றம் என்றும் சொல்வதிற்கில்லை. காரணம், குற்றவாளிகளில் அதிகமானோர் தங்கள் மதச்சாயத்தை, மொழிச்சாயத்தை, இனச்சாயத்தை, சாதி சாயத்தை பூசிக்கொண்டுதான் தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் அறிந்துள்ளோம்.

குற்றத்தை செய்பவர்கள்தான் குற்றவாளிகளே தவிர, அவர்கள் பயன்படுத்தும் கருவிகளைளோ, சார்ந்த சமூகத்தையோ குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியாது என்பதை நாம் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறோம். அதன்பொருட்டே, அமெரிக்கா உலகில் அனேக அட்டூழியங்களை செய்து லட்சக்கணக்கான மானுட உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருந்தாலும் இந்திய கிறிஸ்தவர்களையோ, மியான்மரிலும், இலங்கையிலும் முஸ்லிம்களையும், தமிழர்களையும் கொன்று குவித்தாலும் இந்திய பவுத்தர்களையோ, அசீமானந்தாக்களும், கோட்சேக்களும் செய்யும் தவற்றுக்கு ஒட்டுமொத்த இந்துக்களையோ நாம் குற்றம் சுமத்தவதில்லை. இது புரிந்துகொள்ளப்படக்கூடிய ஒன்றே...

ஆனால், இங்குதான் எங்களுக்கு ஒரு முரண் தட்டுப்படுகிறது. அதுவும் முஸ்லிம்களாகிய எங்கள் விஷயத்தில் மட்டும் அது நிகழ்வதை புரிந்துகொள்வதில் மேலும் முடிச்சுகள் விழுகிறது. அந்நிய அரபு தேசங்களில் நடக்கும் உள்நாட்டு அரசியல் கலகங்களுக்கும், எதிர்வினைகளுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் சம்பந்தப்பட்டவர் அவர் பெயரளவில் முஸ்லிமாக இருந்தாலே எதிர்வினையாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எந்த அடிப்படையில் எழுகிறது?! இதுதான் எவ்வளவு சிந்தித்து பார்ப்பினும் புரிந்துகொள்ள முடியாத முரணாகவே எங்களுக்கு தெரிகிறது. ஒருவேளை புரிந்துகொள்வதில் எங்களுக்கு சாமர்த்தியம் போதவில்லையோ என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது.

இன்னொன்றும் எங்களுக்கு புரிவதில்லை. அது ஆழ்மனத்திலிருந்து கிளம்புகிற உணர்ச்சிகளை புரிந்துகொள்வதில் உள்ள கலங்கல். எங்கு குண்டுவெடித்தாலும் எங்களுக்கு ஏன் பயம் வருகிறது? இன்னும் சொல்வதென்றால் உலகில் எங்கும் குண்டுவெடித்து விடக்கூடாதே, அது முஸ்லிம் வைத்ததாக இருக்கக் கூடாதே, அப்படியே நிகழ்ந்துவிட்டாலும் அது அலுவலக நாட்களில் நிகழ்வாக இருந்துவிடக்கூடாதே என்ற பயமும், இறைவேண்டலும் ஏன் எழுகிறது?

‘அத்தா என்னைத் தீவிரவாதின்னு மற்ற பிள்ளைகள் கிண்டல் பன்றாங்கத்தா ‘ என்று பள்ளிவிட்டு வீடு வந்த பிள்ளைகள் எங்களிடம் கூறும்போதும் நாங்கள் தீவிரவாதிகள் இல்லை என்று தெருவில் இறங்கி கத்தவே தோன்றுகிறது. கட்டுரையாளர் சொல்லிக்கொடுத்து வருகிற எண்ணம் அல்ல அது... தேசத்துரோகிகள் என்றும், மதவெறியர்கள் என்றும், பண்பற்றவர்கள் என்றும், வன்முறையாளர்கள் என்றும் ஒரு நூற்றாண்டு கால வரலாற்று சக்கரங்களை எங்கள் இதயங்கள் மீது ஓடவிட்டதினால் ஏற்பட்ட காயங்களால் புறப்படுகிற வழி அது...

வார்த்தைகளால் வருணிக்கவியலா அவ்வேதனையை வெளிக்கொணர பிரவச வலிக்கார பெண்மணி போல் உரக்க கத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், எதார்த்தத்தில் எத்தனை நாட்களுக்குத்தான் கத்திக்கொண்டிருப்பது? எத்தனை இரவுகள் தான் விழித்திருந்து சுவரொட்கள் ஒட்டிக்கொண்டிருப்பது? நாங்களும் மனிதர்களாய் பிறந்துவிட்டோமே! பிற மானிடரைப் போல் பசியோடும், அவசியத் தேவைகளோடும், முன்னேறிவிடுவோம் என்ற கனவோடும் வாழ்க்கையின் அன்றாட பிரச்சினைகளுடனான முட்டல்மோதல்களிலேயே எங்கள் ஆற்றல்கள் கரைந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், தேசத்தின் விடுதலைக்காக எங்கள் முன்னோர்கள் அடைந்திருக்கிற இழப்புகளின் விளைவுகளை நாங்கள் சுமந்துகொண்டிருக்கிற சூழ்நிலையில் எத்தனை குண்டுவெடிப்புகளுத்தான் நாங்கள் எதிர்வினையாற்றுவது?

இப்படியான மனநிலையில், இறுதியாக எங்கள் பங்குக்கு நாங்கள் ஒரு கோரிக்கை வைக்கிறோம். தீவிர இந்துத்துவர்களிடம், அவர்களின் பிரச்சாரத்தை கேள்விக்கணக்கின்றி நம்பி எங்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கும், வேலைக்கு சேர்க்க மறுக்கும் இந்துக்களை நோக்கியும் ஒரு திறந்த மடல் எழுதுங்கள்.... ‘என் இனிய இந்து சகோதரனே, இஸ்லாமியன் நம் சகோதரன் என்று‘ !

Comments

Popular posts from this blog

காகிதப் பணம் தோன்றிய வரலாறு

உருளை சிப்ஸ் தோன்றிய சுவாரஸ்ய வரலாறு

குமிழ் வடிகட்டி – இணையதள பயனர்களின் பகைவன்