"ஒவ்வொரு கலைஞனும் உருவாகுவதில்லை அவன் பிறக்கிறான்" தனது சினிமா பயணத்தை பகிர்ந்து கொள்கிறார் மைனா “பிரபு சாலமன்” :

"மைனா" வெற்றியின் மூலம் தனது அடுத்த படமான "கும்கி"க்கு இன்னும் அதிகமான பொறுப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்றிருக்கிறார் பிரபு சாலமன். இதற்கு இடையே அவரின் ”சினிமா பயணம்” குறித்து நம்மிடம் பேசியதிலிருந்து...
உங்களை பற்றிய சிறு அறிமுகம்:நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே நெய்வேலிதான். அங்கே பள்ளிப்படிப்பை முடித்த நான், பின்பு திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டயப் படிப்பு முடித்தேன். பிறகு சினிமா மீதான எனது காதல் காரணமாக 1993 ஆம் ஆண்டு சென்னை வந்து இன்று வரை தொடர்கிறது எனது சினிமா பயணம்.



கனவுகளின் பட்டறையாக இருக்கும் சினிமாவுக்குள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

ஒவ்வொரு கலைஞனும் உருவாகுவதில்லை அவன் பிறக்கிறான். ஆம்!. ஏதோ ஒரு தனித்துவமான திறமைகளை தன்னில் கொண்ட மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சுயம் என்று ஒன்று உள்ளது. அந்த வகையிலேதான் சினிமா மீதான என் காதலும் பற்றும். நான் சிறுவயது தொட்டே எதிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்கிற சிந்தனை போக்கை கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் நான் உட்பட நான்கு பிள்ளைகள் இருந்தாலும் ஏன் நான் மட்டும் இதை நோக்கி நகர வேண்டும். ஆம் அதுதான் என் சுயம். சிறுவனாக இருக்கும் போது, காமிக்ஸ் வாசிக்கும் பழக்கம் எனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது. அதன் சிறு சிறு படங்களை வெட்டி, நானே ஒரு புதிய படக்கதைகளை உருவாக்குவேன். அதுபோலவே, பிலிம் சுருள்களோடும் என் உறவு இருந்தது. சிறுவயதில் 5 பைசாக்களுக்கு கிடைக்கும் ஃபிலிம்களை டார்ச் விளக்கு அடித்து படம் காண்பிப்பேன். இப்படித்தான் என் ஆர்வம் ஆரம்ப நாட்களில் வெளிப்பட்டது. இதுவே பின்பு, என் கல்லூரி நாட்களில், இளையராஜாவின் ”ஹவ் டூ நேம் இட்” இசை ஆல்பத்திற்கு திரைக்கதையாக அமைத்து நாடக வடிவை கொடுத்தேன். அது மக்களின் வெகுவான பாராட்டை பெற்று தந்தது. அதுவே என் சினிமா பயணத்திற்க்கு ஊக்கமாகவும் அமைந்த்து.


INSIPRATION (இன்ஸ்பிரேஷன்) அல்லது உங்கள் சினிமாவை பாதித்தவை என்று எதை சொல்வீர்கள்:

அப்படி எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. நாம் அன்றாடம் பார்க்கும் விசயங்களே அதன் அடிப்படையாக அமையலாம். திரைப்படங்களை பொறுத்தவரை நான் கல்லுரி நாட்களில், டேவிட் லீனின் Lawrence of Arabia, William Wyler ன் ben hur, மற்றும் ten commandments, என ஏரளாமான திரைப்படங்கள் பார்த்திருக்றேன். இன்னும் சொல்வதென்றால், stanely cuberic இன் The Shining போன்ற திரைப்படங்கள் எனக்குள் காட்சி ரீதியாக பாதிப்பை ஏற்படுத்திய மிகச்சிறந்த படங்களுள் ஒன்று. அது போன்ற திரைப்படங்களின் பாதிப்புகளை இன்றளவும் நம் இந்திய சினிமாக்களில் காணலாம். மரியோ பூசோ வின் காட் ஃபாதர் போன்ற திரைப்படங்களே மணிரத்தினத்தின், ”நாயகன்” போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தின. இப்படி சொல்லி கொண்டே போகலாம்.


"சினிமா" என்கிற வடிவத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அந்த வகையில் உங்கள் பார்வை என்ன?

நிச்சயமாக என்னுடைய பார்வையில். அது பார்வையாளனை ஆரோக்கியமான முறையில் திருப்திபடுத்தக்கூடிய சாதனம். அந்த ஆரோக்கியத்தின் அளவுகோலே சிறந்த கலைத்தன்மைக்கும் உரித்தான அடையாளம். நான் அதை உண்மை என்று நிரூபணமான முறையில் உண்ர்ந்தது “மைனா” வின் மூலமாகத்தான். என்னை பொறுத்தவரை இந்த மண்ணுடைய இயக்குனர்களாக நான் கருதும், மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்கள் சொல்லிய சினிமாவைத்தான் நான் குறிப்பிடுகிறேன். ஆபாசம் வன்முறை போன்ற கீழ்த்தரமான உணர்வுகளால் ஒரு பார்வையாளனை அணுகுவதில் எனக்கு உடன்பாடில்லை. அது நல்ல சினிமாவும் இல்லை. மக்களின் உணர்வுகளை மையப்படுத்தி சொல்லப்படும் சினிமாதான் நான் விரும்பும் சினிமா. அந்த வகையில் அலாதியான காதல் உணர்வுதான் ”மைனா”வும்.

சினிமா பயணம் – அதன் ஊடாக கற்றதும் பெற்றதும்:

1993ல் ”நம்ம அண்ணாச்சி” படத்தில் உதவி இயக்குனராக எனது சினிமா பயணத்தை தொடங்கி இன்று ”கும்கி” வரை 19 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இதில் இயக்குனராக, தயாரிப்பாளாரக பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளேன். என்னால் பிறரது தயாரிப்பில் படங்களை இயக்கும் போது, ஏதேதோ சில காரணங்களால் படைப்பை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால் மைனாவில் அந்த சிக்கல் இருக்கவில்லை. எப்பொழுதுமே ஆடியன்ஸை “A,B.C” செண்டர்கள் என வகைப்படுத்தி வந்த நாம், மைனாவில் அந்த வேலையை செய்ய முடியவில்லை. சென்னை சத்யம் தியேட்டரில் பார்க்கும் பார்வையாளனும், திருச்சி மீனா திய்ய்ட்டரில் பார்க்கும் பார்வையாளனும் ஒரே வித உனர்வை பிரதிபலிப்பதை நான் பார்த்தபோது, “ ABC” செண்டர்களாக ஆடியன்சை பிரிப்பதன்மேல் நம்பிக்கை இழந்தேன். ஏனெனில் மனிதர்களாக நாம் அனைவரும் ஒரே விதமான உண்ர்வுகளால் பொதுவாகிறோம்.

இதனால் சொந்த தயாரிப்பில்தான் நல்ல கலைஞனாக ஆக முடியும் என்று கூறுகிறீர்களா?

இல்லை. நான் அப்படி சொல்லவரவில்லை. அதிகமான கலை சுத்ந்திரம் இருக்கும் பட்சத்தில் சிறந்த படைப்பை வெளிப்படுத்த முடியும் என்று கூறுகிறேன். இயக்குனர்களை புரிந்து கொள்ளும் தயாரிப்பாளர் கிடைக்கும் பட்சத்தில் அது சிறந்த படைப்பாக ஆக அநேக வாய்ப்புகள் உண்டு.

தயாரிப்பாளாரின் நிலையை பல இயக்குனர்கள் உணர்வதில்லையே?

அது உண்மைதான். ஒரு இயக்குனன் என்பவன் தயாரிப்பளாரின் நிலையை உணர்ந்து செயல்பட்டால்தான் அவன் முழுமையாக தன் பணியை செய்கிறான் என்று பொருள். இது ஒரு பரஸ்பர புரிதல். இயக்குனர் மீது அதிக பொறுப்புகள் உண்டு.

தமிழ் சினிமாவையும் அதன் பார்வையாளகளையும் நீங்கள் பார்க்கும் விதம் குறித்து:

என்னை பொறுத்தவரை, தமிழில் சங்க இலக்கியங்கள் தொட்டு, காதல், இசை, வீரம் ஆகிய மூன்றுமே பாடுபொருளாக இருந்து வருகிறது. அதுவே இன்றளவும் தமிழ் சினிமாக்களிலும் பிரதிபலிக்கிறது. எனவே காதல், இசை, வீரம் ஆகிய மூன்றையும் தமிழ் சினிமாவிலிருந்து பிரித்து விட முடியாது.

என்னிடம் பலர், இந்த காதல் கதைகளை விட்டால் உங்களுக்கு வேறு கதைகளே இல்லையா என்று கேட்கின்றனர், அவர்களுக்கு நான் கூற விரும்பும் பதில், மேலே கூறியவையைத்தான் கூற விரும்புகிறேன்.

இசையை பொறுத்தவரையிலும் அதேதான், MSV, இளையராஜா போன்றோரின் பாடல்களுக்காகவே ஓடிய படங்களும் காலமும் உண்டு. என்னை பொறுத்தவரை பாடல்கள் கதை நகர்த்தியாகத்தான் பயன்பட வேண்டும். அதில் தவறேதும் இல்லை. ஆனால் அதை கதை ஓட்டத்தோடு கலக்க வேண்டும். அதைவிடுத்து பாடல்களை வைக்க வேண்டுமென்றே திணிக்க கூடாது.

நீங்கள் ”இரண்டரை மணிநேர கால அளவில் “வெந்திரையில் மாயாஜாலம்” (Magic in white Screen) செய்வதுதான் சினிமா. அந்த மாயாஜாலத்தில் தொய்வு ஏற்படுவதைத்தான், நாம் போரிங்க், இழுவை, அறுவை என்றெல்லாம் கூறுகிறோம்.

இப்பொழுது கும்கியில் கூட பாடலகளுக்காக மட்டுமே 6 மாதங்கள் உழைப்பை செலுத்தியிருக்கிறேன். அவ்வாறே பாடல்கள், இசை என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக விசாலமாக திறந்துவிடப்பட்டிருக்கும் சினிமா வாசலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 “பா” வரிசையில் தொடர்ந்து 13க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிப்படமாக்கிய பீம்சிங் போன்றோரை இங்கு உதாராணமாக காட்டலாம். ”பாசமலர்” இன்றும் மறக்க முடியாத ஒரு படமாக உள்ளது. ஆனால் அன்று அந்த படங்களை உருவாக்க பயன்படுத்திய கேமராவின் எடை 350 கிலோ. தொழில்நுட்பம் என்பது இரண்டாம் பட்சமே. தரமான படைப்பாளிகளை சார்ந்தே தரமான சினிமாவும் உள்ளது. மைனாவிற்காக மலைக்குகைகளில் நாங்கள் தோளில் சுமந்த கேமரா வெறும் 35 கிலோதான். அதனால் தான் அந்த இடங்களை காட்சிப்படுத்த ,முடிந்தது. ஆனால் அதேசமயம், இன்று அதகரிக்கும் தொழிழ்நுட்ப வளர்ச்சியால் ஒருவிதமான சோம்பேறித்தனம் குடிகொண்டு விடுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு. அதிகமான உழைக்கும் ஆர்வம் இருந்தால் மட்டுமே தொநில்நுட்பங்களின் லட்சியங்களை அடைய முடியும். இப்பொழுது கும்கியில் கூட கண்களால் பார்ப்பதற்கே சிரமமான மிக சக்திவாய்ந்த நீர்விழ்ச்சி காட்சியை தொழில்நுட்பம் (Rain reflector) உதவியோடு படமாக்க முடிந்தது.எனவே தொழிநுட்பம் என்பது அதை இயக்கும் படைப்பாளியை பொறுத்தே அமைகிறது.

தமிழ் சினிமாவில் நீங்கள் மீறிய, மீற விரும்பும் மரபு எது?

இதை சொல்வதால் சிலருக்கு வருத்தமாக கூட இருக்கலாம். டூயட் என்கிற அம்சத்தை என் படங்களில் இருந்து அறவே ஒழித்துவிட்டேன். கதாநாயகி, கதாநாயகன் வாயசைத்து பாடுவதையெல்லாம் என்னால் ஒத்துகொள்ள இயாலாது. அதனால்தான் நான் காலப்போக்கில் அத்தகையவற்றை தவிர்த்துவிடுகிறேன். கும்கியில் அத்தகைய அம்சங்கள் எதுவும் இருக்காது. எதிர்காலத்தில் தமிழ் சினிமாவின் கால வரம்பை 1 ½ மணி நேரத்திற்குள் சொல்லிவிட வேண்டும் என்பதே என் ஆசை. அந்த 1½ மணி நேரமும் க்ளைமாக்ஸாக இருக்க வேண்டும்.( சிரிக்கிறார்)

வியாபாரம் கலை சுதந்திரம் இவற்றிக்கிடையே உள்ள உறவு:

தயாரிப்பாளாரின் புறத்தில் இருந்து அதிக சுத்ந்திரம் இருக்கும் போது, அதிகமான கலைத்தன்மை வெளிப்படும்.( நல்ல படைப்பாளியாக இருக்கும் பட்சத்தில்). நான் தயாரிப்பாளாராய் மாறியபோதுதான் மைனா என்ற படத்தை கொடுக்க முடிந்தது. அதற்கு மட்டும் 53 முறை சவுண்ட் ரீ ரெக்கார்டிங் சென்றோம். இது நான் தயாரிப்பாளாராய் இருக்கப்போய்தான் சாத்தியமானது. கடமையை சரியாக செய்கிற போது வியாபாரமும் சரியாக இருக்கும்.


உங்கள் திரைக்கதை பற்றி கூறுங்கள் – அது எங்கிருந்து உருவாக்கப்படுகிறது?

என்னுடைய பிரதான அனுபவங்களே திரைக்கதையாக மாறுகிறது. எனது படைப்பாற்றல், கற்பனை கலந்த யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. ஒருமுறை சைதாப்பேட்டை சப் கோர்ட் அருகில் நின்று தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக ஒரு காவலாளி கைதியின் கையோடு சேர்த்து விலங்கு மாட்டியிருந்தார். ஏதோ ஒரு பிரச்சினைக்காக அந்த கைதி வந்திருப்பார். ஆனால் என் மனது, காவலாளி-கைதியின் பயணம் குறித்து சிந்தித்தது. ஒருகால், இருவரும் தங்களின் வாழ்க்கை கதைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருக்கக்கூடும். கைதிக்கு அவன் சந்திக்கும் பிரச்சினைக்கு உதவுவதாக காவாலாளி தெரிவித்திருக்க்கூடும். இதனோடு, இவர்கள் பயணத்தில் ஒரு பெண்ணும் சேர்ந்து கொண்டால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைதான் ”மைனா”.

அதுபோலத்தான் கொக்கியும். ஜாதகம், ஜோசியம் போன்ற மூடநம்பிக்கைக்கு எதிராக இருக்கும். ஏனெனில் திரைப்பட வாய்ப்பினை எனது ”ராசி” என்ன என்று கேட்கப்பட்டு மறுக்கப்பட்டேன். அதன் வெளிப்பாடே ”கொக்கி”

இப்போது ”கும்கி” யும் கூட தினசரி செய்திகளில் தொடர்ந்து வரும் ” யானைகள் குடியிருப்புகளில் புகுந்தன “, என்பதை அடிப்படையாக வைத்துதான் கதைக்களம் அமைக்கபட்டிருக்கிறது. இப்படி நாளார்ந்த அநுபவமும் கற்பனையுமே எனது திரைக்கதை.

உங்கள் ஆரம்ப கால திரைப்படங்களிலிருந்து தற்கால திரைப்படங்களின் கதைக்களம் நகரத்திலிருந்து – கிராமம் என்கிற அளவில் மாறியிருக்கின்றதே? அதாவது மண் சார்ந்த கதைக்களங்களிள் உங்கள் கவனம் திரும்பியிருகிறது என்று கூறலாமா.

ஆம் உண்மைதான். இதை எனது திரைப்படங்களின் பரிணாம வளர்ச்சி என்று கூறலாம். நமது மண் சார்ந்த்த அடையாளாங்களை தொலைது வருகிறோம். இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம். இரத்தமும் சதையுமாக இங்கே எத்தனையோ விசயங்கள் இருக்க, நாம் பிற நாட்டு சினிமாக்களை காப்பியடித்து வருகிறோம். இங்கே உள்ள 10 சதவிகித நகரத்து வாழ் மக்களின் வாழ்வையே நாம் படமாக்குகிறோம். மீதி மக்களின் வாழ்வை பதிவு செய்யப்படுவதில்லை. உலகமயமாதலின் காரணமாக, நம் அடையாளங்களை வேகமாக இழந்து வருகிறோம் அதன் காரணமாகவே, இனி வருகின்ற 10 வருட காலத்திற்கான எனது சினிமாக்கள், மண் சார்ந்த விழுமியங்களின் அடிப்படையிலேயே இருக்கும். இழந்த அடையாளங்களை மீட்டெடுக்க, முயற்சி செய்யும் ஒரு கலைஞனாகவே நான் இருக்க விரும்புகிறேன். எந்த ஒரு விசயத்தையும் பழசு என்று அவ்வளவு எளிதாக கூறிவிடக்கூடாது. அதற்குள் பல்வேறு நிகழ்வுகளின் சாட்சிகளின் தொகுப்பாக இருக்கிறது. வெளிநாடுகளில் நம் தமிழ் சினிமாவின் டி.வி.டி-ஐ திருடி அவர்களை ஒரு படமாவது எடுக்க வைக்கும் அளவுக்கு நம் மண் சார்ந்த படம் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை.

Comments

Popular posts from this blog

காகிதப் பணம் தோன்றிய வரலாறு

உருளை சிப்ஸ் தோன்றிய சுவாரஸ்ய வரலாறு

குமிழ் வடிகட்டி – இணையதள பயனர்களின் பகைவன்